சர்வதேச அளவில் செயல்படக்கூடிய பல்வேறு நிறுவனங்களும் மனிதர்களை பணி நீக்கம் செய்துவிட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மூலம் வேலைகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாக இருக்கும் கூகுள் , மெடா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் கோடிங் உள்ளிட்ட வேலைகளுக்கு தற்போது பெரும்பாலும் ஏஐ தொழில்நுட்பங்களே பயன்படுத்துவதாக அறிவித்துள்ளன.
ஐபிஎம் நிறுவனம் கூட தங்கள் நிறுவனத்தில் ஹெச்ஆர் துறையில் ஊழியர்களை குறைத்து விட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக அறிவித்திருக்கிறது. இந்த சூழலில் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பிபிஓ பணியில் ஆட்களை பெரும் அளவு குறைத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

மணி கண்ட்ரோல் தளத்திற்கு பேட்டி அளித்திருக்கும் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீ கிருஷ்ணா ராமகார்த்திகேயன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மூலம் தங்கள் நிறுவனத்தில் பல்வேறு பணிகள் தானியங்கு முறைக்கு மாற்றப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார் . இதனால் பிபிஓ பிரிவில் மனிதர்களுக்கான தேவை குறைந்திருப்பதாகவும் பிபிஓ பிரிவில் தங்கள் நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை 500 ஆக குறைத்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே தங்கள் நிறுவனம் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து விட்டது என்றும் ஏஐ ஏஜெண்டுகளை அந்த பணிகளில் நியமனம் செய்துவிட்டு கூடுதலாக 100 பேரை ஐடி சேவை பிரிவுக்காக வேலைக்கு எடுத்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். மேலும் தங்கள் நிறுவனத்தில் மேலும் சில பணிகளுக்காக அதாவது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான வேலைகளை செய்ய வேண்டிய பொறுப்புகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் ஏஜெண்டுகளை நியமிக்க இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
தங்களுடைய நிறுவனம் ஐடி பிரிவில் ஊழியர்களை இந்த ஆண்டு அதிக அளவில் வேலைக்கு தேர்வு செய்யும் என அவர் தெரிவித்திருக்கிறார் . இந்த ஆண்டு தொடங்கியது முதல் புதிதாக 1429 பேரை வேலைக்கு எடுத்திருப்பதாகவும் தங்கள் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை இதன் மூலம் 31564 ஆக உயர்ந்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
தங்கள் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உடன் ஒருங்கிணைப்பதாக தெரிவித்திருக்கும் அவர் ஹெல்ப் டெஸ்க் வேலைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் இந்த பிரிவுகளில் இருந்து 70 லிருந்து 80 சதவீதம் வரையிலான மனித வளம் குறைக்கப்படுகிறது என அவர் கூறியிருக்கிறார். உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஐடி சேவைகளை விட பிபிஓ சேவைகள் தான் பெருமளவில் தாக்கத்தை சந்திக்கும் என அவர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications