ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஓசூர் தொழில் ரீதியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அங்கே ராணுவ தளவாட உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது.
ஹெச்எஃப்சிஎல் நிறுவனம் தமிழ்நாட்டில் முதன்முறையாக தன்னுடைய புதிய பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி ஆலையை தொடங்கியுள்ளது. ஓசூரில் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வின் முன்னாள் தலைவர் சதீஷ் ரெட்டி கலந்து கொண்டு இந்த ஆலையை தொடங்கி வைத்தார். ஹெச்எஃப்சிஎல் என்பது ஹிமாச்சல் ஃபியூச்சர்டிஸ்டிக் கம்யூனிகேஷன் லிமிடெட் என்ற பெயரில் செயல்பட்டு வரக்கூடிய ஒரு நிறுவனம்.

இந்த நிறுவனம் தொலைதொடர்பு உள்கட்டமைப்பில் பிரதானமாக செயல்பட்டு வந்தது முதன்முறையாக பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட உபகரணங்களை தயாரிக்கும் பணியில் கால் பதித்துள்ளது. இதற்காக இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் ஓசூரில் ராணுவ தளவாட ஆலையை தொடங்கியுள்ளது.
இந்த ஆலையை தொடங்கி வைத்து பேசிய டிஆர்டிஓ -வின் முன்னாள் தலைவர் சதீஷ் ரெட்டி, பாதுகாப்பு உபகரண ஏற்றுமதியாளராக வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த நோக்கத்திற்கு உதவும் வகையில் ஹெச்எஃப்சிஎல் நிறுவனம் ராணுவ தளவாட உற்பத்தி ஆலையை ஓசூரில் நிறுவி இருக்கிறது என கூறினார்.
இதன் மூலம் ராணுவ தளவாட இறக்குமதி குறையும் என்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராணுவ உபகரணங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது ஓசூரில் நிறுவப்பட்டுள்ள இந்த ஆலையில் தெர்மல் வெபன் சைட்டுகள், எலக்ட்ரானிக் ஃபியூஸ்கள், உயர்திறன் கொண்ட ரேடியோ ரிலே, கண்காணிப்பு ரேடார் உள்ளிட்டவை தயாரிக்கப்பட உள்ளன.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதாவது பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து உபகரணங்களையும் இந்தியாவிலேயே தயாரித்து பயன்படுத்துவது என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அதன் ஒரு பகுதியாக தான் ஓசூரில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையை பொறுத்தவரை ஆண்டுக்கு 5 ஆயிரம் தெர்மல் வெபன் சைட்டுகள், 2 லட்சம் எலக்ட்ரானிக் ஃபியூஸ்கள், ஆயிரம் யூனிட்டுகள் உயர்த்திறன் கொண்ட ரேடியோ ரிலே மற்றும் கண்காணிப்பு ரேடார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த புதிய ஆளை மூலம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. ஓசூரில் இந்த ஆலை திறக்கப்பட்டதை அடுத்து ஹெச்எஃப்சிஎல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இரண்டு சதவீதம் உயர்வு கண்டது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications