கிரெடிட் கார்டுகளை நிர்வகிக்கும் ஃபின்டெக் தளமான CRED-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான குணால் ஷா, CRED தளம் கடந்த ஆண்டு மட்டும் ரூ. 11,000 கோடி மதிப்பிலான மறைமுக கட்டணங்கள் மற்றும் தாமத கட்டணங்களை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். போதிய விழிப்புணர்வு இல்லாமல் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் மக்கள் செலுத்திய மறைமுக கட்டணம்தான் இது.
மக்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளை மிகவும் கவனக்குறைவாக பயன்படுத்துவதை இது சுட்டிக்காட்டியுள்ளது. கிரெடிட் கார்டுகளுக்கு வங்கிகள் பல ஹிடன் சார்ஜ்களை விதிக்கின்றன. நீங்களும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவராக இருந்தால் வங்கிகள் விதிக்கும் ஹிடன் சார்ஜ் குறித்து தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வருடாந்திர கட்டணம்: பல கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் பெரும்பாலான கார்டுகளுக்கு இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல் முறை இலவசமாக கிரெடிட் கார்டு கிடைத்தாலும் அடுத்தடுத்த ஆண்டு முதல் இந்த கட்டணம் வசூலிக்கப்படும். வங்கிகள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் ஷாப்பிங் செய்த பிறகு கிரெடிட் கார்டுகளின் வருடாந்திர கட்டணத்தை தள்ளுபடி செய்கின்றன. எனவே கிரெடிட் கார்டு பெரும் போது வருடாந்திர கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறதா? இல்லையா? என்பதை நன்றாக தெரிந்து கொண்டு கிரெடிட் கார்டு பெறுங்கள்.
கிரெடிட் கார்டு நிலுவை தொகைக்கு விதிக்கப்படும் வட்டி: ஒவ்வொரு கிரெடிட் கார்டும் அந்நிறுவனத்தின் முக்கிய வருமான ஆதாரமாகும். ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டு அறிக்கை அந்தந்த பயனருக்கு அனுப்பப்படும். அதில் ஒரு நிலுவைத் தொகை எழுதப்பட்டிருக்கும். இந்தத் தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தி விட வேண்டும். ஒரு நாள் தாமதமாக செலுத்தினாலும் கூட நிலுவைத் தொகை அனைத்திற்கும் ஆண்டுக்கு 36 முதல் 48 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படும். அதே நேரம் சிலர் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை மட்டும் செலுத்தி கிரெடிட் கார்டு வலையில் சிக்கி கொள்கின்றனர். இவர்களும் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணம்: கிரெடிட் கார்டு பெறும்போது பணம் எடுக்கும் வசதி உள்ளதாக கூறப்படும். இது கிரெடிட் கார்டு வாங்குபவர்களுக்கு மிகவும் நல்ல ஒரு அம்சமாக தோன்றலாம். ஆனால் கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுத்த முதல் நாளிலிருந்து வட்டி வசூலிக்க நிறுவனங்கள் தொடங்கிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவசர தேவை ஏற்பட்டால் அந்த சமயத்தில் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கலாம். ஆனால் பெரும்பாலும் இவற்றை தவிர்க்க முயற்சி செய்வதே கிரெடிட் கார்டு பெறுபவர்களுக்கு நல்லது.
எரிபொருள் கட்டணம்: சில நிறுவனங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி எரிபொருள் நிரப்பினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கும். பெரும்பாலான நிறுவனங்கள் இந்த கூடுதல் கட்டணத்தை திரும்ப பெரும் வசதியை வழங்கும். ஆனால் அதற்கும் நிபந்தனைகள் உண்டு.
வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள்: பெரும்பாலான கிரெடிட் கார்டுகளின் ஒரு பெரிய அம்சம் என்னவென்றால், நீங்கள் அவற்றை வெளிநாட்டிலும் பயன்படுத்தலாம். எனவே நீங்கள் வெளிநாட்டில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்த திட்டமிட்டால், முதலில் உங்கள் வங்கிக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications