ஈரான் மீதான போர் தாக்குதல், வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றங்கள் மூலம் ஏற்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறை குறித்து அதிகமாக பேசப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில் உலக பொருளாதாரத்தை அமைதியாக பதம் பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு முக்கிய பிரச்சனை குறித்து பலரும் கவனிக்க மறந்துள்ளனர்.
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை மூலம் சல்பர் (Sulfur) என்ற மூலப்பொருள் உற்பத்தியில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. இந்த சல்பர் பற்றாக்குறை கார்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உட்பட பல தொழில்துறை உற்பத்தி பொருட்களின் விலையை உயர்த்தக்கூடிய முக்கிய காரணமாக மாறும் அபாயம் உள்ளது என சார்தக் அஹுஜா தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சல்பர் ஏன் முக்கியம்?
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு செயல்முறையின் போது உருவாகும் உப பொருள் தான் இந்த சல்பர். இந்த சல்பர் தான் பின்னர் சல்பியூரிக் அமிலம் (Sulphuric Acid) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. தொழில்துறை உலகில் மிகவும் முக்கியமான இந்த அமிலம், பல உற்பத்தி செயல்முறைகளில் அடிப்படை மூலப்பொருளாக செயல்படுகிறது.
முக்கியமாக காப்பர் (Copper), நிக்கல் (Nickel), கோபால்ட் (Cobalt) போன்ற முக்கிய தாதுகளில் இருந்து உலோகங்களாக சுத்திகரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சல்பியூரிக் அமிலம் மிக அவசியமான ஒன்று. இந்த உலோகங்கள் தான் இன்றைய டிஜிட்டல் மற்றும் எலக்ட்ரிக் உலகின் அடிப்படையாக உள்ளகு.
உதாரணமாக மின்சார வாகனங்கள் (EV), லேப்டாப், ஸ்மார்ட்போன்கள், டிரான்ஸ்பார்மர்கள், பல்வேறு மின்னணு சாதனங்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் இந்த உலோகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
இதனால் சல்பர் உற்பத்தில் ஏற்படும் பாதிப்பு நேரடியாக இந்த உலோகங்கள் பயன்படுத்தும் அனைத்து துறைகளையும் பாதிக்கும். இதன் விளைவாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி செலவும் உயரக்கூடும்.
சல்பர் கிடைப்பில் ஏற்படும் சிக்கல் உலகளவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை உயர வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்புகள், வீட்டு மின்சாதனங்கள் மட்டுமல்லாமல், கார் உற்பத்தியும் இதனால் பாதிக்கப்படலாம்.
ஈரான் போர் அல்லது உலகளாவிய அரசியல் பதற்றங்கள் நேரடியாக எண்ணெய், எரிவாயு போன்ற துறைகளில் மட்டுமல்லாமல், அதன் மறைமுக விளைவுகள் பல்வேறு தொழில்துறைகளில் பாதிக்க துவங்கியுள்ளது. இதையே பொருளாதார நிபுணர்கள் "Second and Third Order Effects" என குறிப்பிடுகின்றனர்.
இப்போது உருவாகி வரும் சல்பர் பற்றாக்குறை மூலம் ஏற்படப்போகும் முழுமையான தாக்கம் இன்னும் தெளிவாக கணக்கிடப்படவில்லை என்றாலும், வரும் மாதங்களில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலையில் உயர்வு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.


Click it and Unblock the Notifications