இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த ஒரு வருடமாகப் புதிய பிராஜெக்ட் கைப்பற்றல், அதிக வருவாய், குறைவான செலவுகள் எனப் பல காரணிகள் சாதகமாக அமைந்துள்ள நிலையில் இத்துறை வழக்கத்தைக் காட்டிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதேவேளையில் ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
ஆனால் இந்த நேரத்தில் ஐடி நிறுவனங்களுக்கு முக்கியமான பிரச்சனை உருவாகியுள்ளது. இதனால் இத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி கணிசமான அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்கள் வெளியேற்பு விகிதம்
இந்திய ஐடி துறையில் தற்போது திறமையான ஊழியர்களுக்கும், புதிய தொழில்நுட்பத்தில் அனுபவம் உள்ள ஊழியர்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் வெளியேறும் விகிதமான Attrition Rate அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஊழியர்கள் வெளியேற்பு
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் 2020ல் கடும் போராட்டத்திற்கு மத்தியில் பெற்ற பல பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களுக்குத் தேவையான ஊழியர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்ற இலக்கில் குறியாக நிற்கும் நிலையில் ஐடி நிறுவனங்கள் மத்தியில் ஊழியர்கள் வெளியேற்பு விகிதம் அதிகரித்துள்ளது.
10 லட்சம் ஊழியர்கள்
இந்நிலையில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஹான் டிஜிட்டல் நிறுவனம் இந்தியாவில் 100 ஐடி நிறுவனங்கள் மத்தியில் ஒரு முக்கியமான ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் சுமார் 10 லட்சம் ஐடி ஊழியர்கள் இந்த வருடம் தங்கள் பணியை ராஜினாமா செய்துவிட்டு புதிய வேலைவாய்ப்புக்குச் செல்ல தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளதாக இந்த ஆய்வுகள் கூறுகிறது.
22 சதவீதம் வரையில் உயரும்
2020ல் இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் சராசரியாக ஊழியர்கள் வெளியேற்பு விகிதம் 12 சதவீதமாக இருந்தது. இதேபோல் ஐடி மற்றும் BPM நிறுவனங்கள் மத்தியில் 2021ஆம் ஆண்டு முடிவிற்குள் ஊழியர்கள் வெளியேற்பு விகிதம் 22 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
அதிகச் செலவு
ஒரு துறையில் அதிகளவிலான ஊழியர்கள் வெளியேறும் போதும், காலியான இடத்தை வேகமாக நிரப்ப வேண்டும். இதுவே ஒரு நிறுவனத்தில் சுமார் 22 சதவீதம் ஊழியர்கள் ஓரே காலகட்டத்தில் வெளியேறும் போதும் புதிய ஊழியர்கள் அமைப்பதில் அதிகச் செலவாகும்.
90 நாட்களில் பை பை
2021ஆம் ஆண்டின் முதல் 3 மாதத்தில் மட்டும் ஒரு நிறுவனத்திற்குச் சராசரியாக 5 முதல் 8 சதவீதம் ஊழியர்கள் பணியில் சேர்ந்து அடுத்த 90 நாட்களில் பணியைவிட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலை 2021ஆம் ஆண்டின் இறுதி வரையில் நீடிக்கும் எனப் பெரு நிறுவனங்களின் ஹெச்ஆர் மற்றும் ஹெச்ஆர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
சம்பள உயர்வு
இதுமட்டும் அல்லாமல் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் புதிய வேலைவாய்ப்புக்கு மாறும் ஊழியர்கள் குறைந்தபட்சம் 15 முதல் 25 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை சாரசரியாகப் பெறுகின்றனர்.
ஐடி துறையில் தற்போது உருவாகியுள்ள இக்கட்டான சூழ்நிலை பிரஷ்ஷர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.
அடுத்தது என்ன நடக்கும்..?!
இந்த பிரச்சனையை சமாளிக்க ஐடி நிறுவனங்களுக்கு தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பள உயர்வு , பதவி உயர்வு, ரிட்டென்ஷன் போனஸ் ஆகியவை அளிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இதேவேளையில் புதிய தொழில்நுட்பத்தில் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து நீண்ட காலம் நிறுவனத்தில் தக்க வைத்துக்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications