கோவையில் பங்குச் சந்தை மூலம் அதிக லாபம் ஈட்டித் தருவதாக ஆசைவார்த்தை ரூ.1.12 கோடி வரை ஏமாற்றிய இருவர் மீது மாநகர சைபர் கிரைம் போலீசார் இரண்டு தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம் பீளமேடு பகுதியை சேர்ந்தவர் எஸ். தியாகராஜன் (வயது 46). இவர், மெக்கானிக்கல் பட்டறை உரிமையாளராக உள்ளார். இவர், தற்போது ஒரு மோசடியில் சிக்கி ரூ.65.51 லட்சம் பணத்தை இழந்துள்ளார். அதாவது, கடந்த ஜூன் மாதம் 'Odmax Stock Market Investment' என்ற வாட்ஸ்அப் குழுவில் சைபர் மோசடி கும்பல் தியாகராஜனை சேர்த்துள்ளது.
அந்தக் குழுவில் இருந்தவர்கள், தாங்கள் 'Odmax Stock Market' மூலம் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றதாக ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து வந்துள்ளனர். இதைப் பார்த்த தியாகராஜனுக்கும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இதையடுத்து, அவரும் இதில் முதலீடு செய்ய முடிவெடித்தார்.

பின்னர், இந்த முதலீடு குறித்த விவரங்களை பெறுவதற்காக வாட்ஸ் குழு நிர்வாகியை தியாகராஜன் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர், 'Odmax Stock Market' என்ற இணையதளத்தில் கணக்கை தொடங்கி, அதில் கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை, தியாகராஜன் 12 தவணைகளாக மோசடி கும்பல் வழங்கிய வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு சுமார் ரூ.65.51 லட்சம் அனுப்பியுள்ளார்.
ஆனால், அதில் இருந்து லாபம் எதுவும் பெறாததால் சந்தேகமடைந்த தியாகராஜன், அந்த கும்பலை தொடர்பு கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தியாகராஜன், செப்டம்பர் 18ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடி கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையை போல் ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த பி. கார்த்திகேயன் என்பவர், ஆன்லைன் மோசடியில் சிக்கி ரூ.46.65 லட்சம் இழந்துள்ளார். இவர், கடந்த மே மாதம் ஃபேஸ்புக் தளத்தில் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர், இதுகுறித்து தெரிந்து கொள்ள அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
கார்த்திகேயனிடம் பேசிய நபர், இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து, அவர் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு கார்த்திகேயனும் பணத்தை அனுப்பி வந்துள்ளார். ஆனால், அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. முதலீடு செய்த முழுத் தொகையையும் இழந்தார். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திகேயனின் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற போலி ஆன்லைன் முதலீட்டு வலைகளில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications