கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட வர்த்தக முடக்கத்தின் காரணமாக இந்தியாவில் பல நிறுவனங்கள் வர்த்தகத்தை முடக்கியும், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குனருக்கு 38 சதவீத சம்பள உயர்வு பெற்றுள்ளார்.
இந்தியாவில் சிறந்த வங்கி சேவை, முதலீட்டாளர்களுக்கு உறுதியான லாபம் என நீண்ட வருடமும் இந்திய பங்கு சந்தையிலும், வர்த்தகச் சந்தையில் வெற்றிகரமான ஹெச்டிஎப்சி வங்கி திகழ்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று இவ்வங்கியின் நிர்வாகத் தலைவர் ஆதித்யா பூரி.
அவர் பதவியில் அடுத்த சில மாதங்களில் அமரப்போகும் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
ஆதித்யா பூரி
இந்திய தனியார் வங்கித்துறையில் மிகப்பெரிய வங்கியாக உயர்த்திருப்பது மட்டும் அல்லாமல் கடந்த 25 வருடங்களாக இந்திய முதலீட்டாளர்களுக்குச் சிறந்த முதலீட்டு வாய்ப்பை கொடுத்துள்ள ஒரு நிறுவனமாகத் திகழ்கிறது ஹெச்டிஎப்சி.
இந்நிலையில் 2019-2020ஆம் நிதியாண்டுக்கான சம்பளத்தில் கடந்த வருடத்தை விடவும் சுமார் 38 சதவீதம் அதிகச் சம்பளத்தை வாங்கியுள்ளார் ஹெச்டிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆதித்யா பூரி. இந்த உயர்வின் மூலம் ஆதித்யா பூரியின் சம்பளம் 18.92 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பங்குகள்
ஆதித்யா பூரி தனது பங்கு இருப்பை மறுசீரமைப்பு செய்தது மூலம் சுமார் 161.56 கோடி ரூபாய் அளவிலான பணத்தைப் பெற்றுள்ளார். இதில் 2018-19ஆம் நிதியாண்டில் 70 வயது நிரம்பிய நிர்வாகத்தை விட்டு வெளியேற முடிவு செய்த நிலையில் பங்கு மறுசீரமைப்புச் செய்து 42.20 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற்றார்.
அடுத்த தலைவர்
ஹெச்டிஎப் குரூப் தலைவர் மற்றும் "change agent" ஆன சசிதர் ஜகதீசன் தான் ஆதித்யா பூபி வெளியேற்றத்திற்குப் பின் அவர் இடத்தில் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இவர் 2020ஆம் நிதியாண்டில் 2.91 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார்.
ஐசிஐசிஐ வங்கி
தனியார் வங்கி துறையில் ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியான சந்தீப் பக்ஷி கடந்த நிதியாண்டில் 4.90 கோடி ரூபாயைச் சம்பளமாகப் பெற்ற நிலையில், 2020ஆம் நிதியாண்டில் 6.31 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளார்.
ஆக்சிஸ் வங்கி
இதேபோல் ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் சவுத்ரி 2019ஆம் நிதியாண்டில் வெறும் 1.27 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்ற நிலையில், 2020ஆம் நிதியாண்டில் 6.01 கோடி ரூபாய் சம்பளத்தைப் பெற்றுள்ளார்.
கோட்டாக் மஹிந்திரா
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைவராக இருக்கும் உதய் கோட்டாக் இந்நிறுவனத்தில் 26 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில், 2020ஆம் நிதியாண்டில் இவரது சம்பளம் 18 சதவீதம் குறைந்துள்ளது.
2019ஆம் நிதியாண்டில் உதய் கோட்டாக் 3.52 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்று வந்த நிலையில் 2020ஆம் நிதியாண்டில் 2.97 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications