சென்னை: அதானி குழுமம் தொடர்பான சர்ச்சையில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் இணைந்து செயல்பட்டு உள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த குற்றச்சாட்டுகளை மாதபி புச் மற்றும் அவரது கணவர் முழுமையாக மறுத்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், தற்போது இந்த சர்ச்சை உச்ச நீதிமன்றத்தில் அதானி விவகாரத் துறையின் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில், இந்தியாவின் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான SEBI-யின் தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புச் மற்றும் அவரது கணவர் பங்கு வைத்திருந்ததாக ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க மறுபுறம் தவால் புச் பணியாற்றும் பிளாக்ஸ்டோன்-க்காக செபியின் தலைவராக மாதபி புச் செய்த சில முக்கியமான பணிகளையும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் வெளியிட்டு இந்திய முதலீட்டு சந்தை குறித்து பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
மாதவி புச்-ன் கணவர் தவால் புச், 2019-ஆம் ஆண்டு பிளாக்ஸ்டோன் நிறுவனத்தில் மூத்த ஆலோசகராகச் சேர்ந்தார். அதற்கு முன்பு அவர் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான யுனிவேர்சல் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். நிதித் துறை, ரியல் எஸ்டேட் அல்லது மூலதன சந்தை துறையில் அனுபவம் இல்லாத தவால் புச், எப்படி பிளாக்ஸ்டோன் போன்ற முதலீட்டு துறையில் ரவுண்டு கட்டி அடிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் மூத்த ஆலோசகராக எப்படி பதவியேற்க முடியும் என்ற கேள்வியை ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் பிளாக்ஸ்டோன் நிறுவனம், இந்தியாவில் முதல் ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்ட் நிறுவனமான எம்பாசி ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்ட் நிறுவனத்தைத் தொடங்கியது. இதற்கு 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் SEBI அனுமதி அளித்தது. இது தவால் புச் பிளாக்ஸ்டோனில் சேர்ந்த சில மாதங்களுக்கு முன்பே நடந்துள்ள முக்கியமான விஷயம்.
இதற்குப் பின்னர், மாதபி புச் SEBI-யில் முக்கிய பொறுப்பில் இருந்த காலகட்டத்தில், பிளாக்ஸ்டோன் நிறுவனம் மேலும் இரண்டு ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்ட் நிறுவனங்களைத் தொடங்கியுள்ளது. இதற்கு SEBI அனுமதி அளித்தது.
மாதபி புச் SEBI அமைப்பின் உயர் பதவியிலும், தவால் புச் பிளாக்ஸ்டோன் நிறுவனத்தில் பணியாற்றிய காலகட்டத்தில் REIT தொடர்பாக SEBI பல்வேறு விதிகளை இயற்றியுள்ளது. இது ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்ட் நிறுவனங்களுக்கு அதிக நன்மை செய்துள்ளது. குறிப்பாக பிளாக்ஸ்டோன் நிறுவனத்திற்கு இது பெரும்பலனாக அமைந்துள்ளது என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
இதில் குறிப்பாக SEBI பல்வேறு சந்தர்ப்பங்களில் ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்ட் நிறுவனங்கள் (REITs) தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது. இதில் ஏழு கலந்தாய்வு ஆவணங்கள், மாஸ்டர் சுற்றறிக்கையில் மூன்று புதுப்பித்தல், மைர்போ, ஸ்மால், மீடியம் REIT நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டி மற்றும் பிளாக்ஸ்டோன் போன்ற யூனிட் உரிமையாளர்களுக்கான புதிய இயக்குநர் நியமன உரிமைகள் ஆகியவை இக்காலக்கட்டத்தில் கொண்டுவரப்பட்டவை ஆகும்.
இந்த காலக்கட்டத்தில் பிளாக்ஸ்டோன் முதலீட்டில் இயக்கும் Mindspace REIT இந்தியாவின் 2வது பெரிய REIT ஆக ஆகஸ்ட் 2020ல் இருந்தது, Nexus Select Trust மே 2023ல் பட்டியலிடப்பட்டது.
டிசம்பர் 2023ல் தவால் புச் பணியாற்றிய பிளாக்ஸ்டோன், எம்பசி REIT நிறுவனத்தில் இருந்த தனது பங்குகளை விற்பனை செய்து சுமார் 853 மில்லியன் டாலர் பணத்தை வெளியேற்றி லாபம் அடைந்தது. இது இந்தியாவின் மிகப்பெரிய பிளாக் டிரேட் அந்த வருடத்தில் இருந்தது என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது அறிக்கையில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், 2023 காலகட்டத்தில் நடந்த ஒரு தொழிற்துறை கூட்டத்தில் செபி தலைவராக மாதபி புச் கலந்துகொண்டு ரியல் எஸ்டேட் முதலீட்டு டிர்ஸ்ட் நிறுவனங்களைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக எதிர்காலத்திற்கான முதலீட்டுத் திட்டம் என்றும், அனைத்து முதலீட்டாளர்களும் REIT-ஐ சாதகமான சொத்து முதலீடாகக் கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவரது கணவர் பணியாற்றும் பிளாக்ஸ்டோன் நிறுவனத்திற்கு இது பெரும்பலன் அளிக்கும் என்பதை மறைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications