உலகளவில் மிகவும் பிரபலமான ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச்-ன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் தனது நிறுவனத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் அதானி குழுமத்திற்கு எதிராக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை உட்பட பல்வேறு முக்கியமான நிறுவனங்களின் தில்லுமுல்லை இந்நிறுவனத்தின் பிரத்தியேகமான விசாரணையின் அடிப்படையில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இதிலும் அதானி குழுமம் தொடர்பான அறிக்கையை வெளியிடும் போது "கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடி" செய்துள்ளதாகக் ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கைகள் மூலம் பல நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது, மட்டும் அல்லாமல் பெரும் நிதி இழப்புகளையும் சந்தித்துள்ளது. இந்த நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடுவதாக நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது, இதற்காக அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா..?
நேட் ஆண்டர்சன் கூறுகையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை நடத்துவதற்கு அதிகப்படியான பணிகள் செய்ய வேண்டியுள்ளது, இதை தன்னால் தொடர்ந்து செய்ய முடியவில்லை என்பதைக் காரணம் காட்டி தற்போது நிறுவனத்தை மூடுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் நிறுவனத்தை மூடும் முடிவு யாருடைய அச்சுறுத்தல் காரணமாகவோ, உடல்நல பிரச்சினை காரணமாகவோ அல்லது பிற தனிப்பட்ட காரணங்களால் எடுக்கப்படவில்லை என்றும் நேட் ஆண்டர்சன் தெளிவுபடுத்தினார். ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடுவதற்கான தனது முடிவை கடந்த வருடமே நிறுவனத்தின் ஊழியர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹிண்டன்பர்க் தனது பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும் தனது வேலையால் மட்டுமே தனது வாழ்க்கை வரையறுக்கப்படுவதை தான் விரும்பவில்லை என்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் நேட் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
இதேபோல் நேட் ஆண்டர்சன் தனது வாழ்க்கையில் ஹிண்டன்பர்க் ஒரு முக்கியமான அத்தியாயமாகக் கருதுவதாகவும், ஆனால் இதை தன் வாழ்க்கையின் அடையாளமாக கருதவில்லை என்றும் அவர் கூறினார். இந்த முடிவை எடுத்த பின்பு தான் மிகவும் நிம்மதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிறுவனம் மூட முடிவு செய்த பின்பு எங்களுடைய பைப்லைனில் உள்ள நிறுவனங்கள் தொடர்பாக இதுவரையில் நாங்கள் திரட்டிய தரவுகள், ஆவணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்து அறிக்கையாக வெளியிடும் பணிகளை நிறுவனம் மேற்கொண்டு வந்தது. கடைசியாக போன்சி திட்டத்தை பற்றி நாங்கள் வெளியிட்ட அறிக்கையோடு எங்களுடைய பைப்லைன் முடிந்தது. இதனாலேயே தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என நேத்தன் ஆண்டர்சன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications