பிரிட்டன் நாட்டில் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ஹிந்துஜா குரூப் ஐரோப்பா மற்றும் இந்தியாவில் பல வர்த்தகத்தை வைத்துள்ளனர்.
இந்தப் பிரம்மாண்ட வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்கள் தான் கோபிசந்த் ஹிந்துஜா, பிரகாஷ் ஹிந்துஜா, ஸ்ரீசந்த் ஹிந்துஜா மற்றும் அசோக் ஹிந்துஜா. ஹிந்துஜா பிரதரஸ் பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கின்றனர்.

Hinduja Group-ஐ ஆளும் நான்கு ஹிந்துஜா சகோதரர்களில் மூத்தவரும் ஹிந்துஜா குழுமத்தின் தலைவருமான எஸ்பி ஹிந்துஜா என அழைக்கப்படும் ஸ்ரீசந்த் பிரேமானந்த் ஹிந்துஜா 87 வயதில் லண்டனில் இன்று காலமானார். அவர் சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று காலமானதாக ஹிந்துஜா குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
எஸ்பி ஹிந்துஜா மறைவு குறித்து ஹிந்துஜா குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் குடும்பத் தலைவரும், ஹிந்துஜா குழுமத்தின் தலைவருமான எஸ் பி ஹிந்துஜா இன்று காலமானதை கோபிசந்த், பிரகாஷ், அசோக் மற்றும் ஒட்டுமொத்த ஹிந்துஜா குடும்பத்தினரும் மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
எங்களுடைய சகோதரர் எஸ் பி ஹிந்துஜா மறைந்த எங்கள் தந்தை பி.டி. ஹிந்துஜாவின் கொள்கைகள் மற்றும் மதிப்புகளை வழங்கி எங்கள் குடும்பத்திற்கு வழிகாட்டியாக இருந்தார்.
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே வலுவான உறவைக் கட்டியெழுப்புவதில் எஸ் பி ஹிந்துஜா தனது சகோதரர்களுடன் இணைந்து மிக முக்கியப் பங்காற்றினார். அவரது மறைவால் ஹிந்துஜா குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எஸ் பி ஹிந்துஜா என அழைக்கப்படும் ஸ்ரீசந்த் பர்மானந்த் ஹிந்துஜா 1935 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில் பிறந்தார். அவர் பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜா மற்றும் ஜமுனா பர்மானந்த் ஹிந்துஜா ஆகியோரின் மூத்த மகன் ஆவார். மும்பையில் உள்ள தாவர் வணிகவியல் கல்லூரி மற்றும் ஆர்.டி. தேசியக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
எஸ் பி ஹிந்துஜா தனது தந்தையின் ஜவுளி மற்றும் வர்த்தகத் தொழில்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவருடைய தந்தை அப்போதைய பம்பாய் மற்றும் ஈரான் நாட்டின் தெஹ்ரானில் வர்த்தகம் செய்து வந்தார்.
இந்தியாவில் இருந்து ஈரானுக்கு உணவுப் பொருட்கள் (வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு) மற்றும் இரும்புத் தாது விற்பனை ஆகியவை அவரது ஆரம்பகால வாழ்க்கையில் செய்து வந்தார்.
1980 களில் பிரிட்டிஷ் லேலாண்ட் நிறுவனத்திடம் இருந்து அசோக் லேலண்ட், செவ்ரான் நிறுவனத்திடம் இருந்து GULF OIL கையகப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து 1990 களில் சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவில் வங்கிகளை நிறுவியதன் மூலம் ஹிந்துஜா-வின் பெயர் டாடா, பிர்லா, அம்பானி போன்ற இந்தியாவின் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியங்களின் பெயர்களுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு உயர்ந்தது.
2022 ஆம் ஆண்டில் எஸ் பி ஹிந்துஜா உடன் சேர்ந்து ஹிந்துஜா குடும்பம் தான் பிரிட்டன் நாட்டின் பணக்காரராக இருந்தார். இவர்களுடைய சொத்து மதிப்பு 28.5 பில்லியன் டாலர். ஹிந்துஜா குடும்பம் பிரிட்டன் நாட்டில் குடியுரிமை பெற்றுள்ளனர்.
எஸ் பி ஹிந்துஜா, மது என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு Shanu, Vinoo என இரு மகள்கள் உள்ளனர். எஸ் பி ஹிந்துஜா-வின் மனைவி மது ஜனவரி 2023ல் மறைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications