சீனாவை தற்போது HMPV வைரஸ் மிரட்டி வருகிறது. அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் சில நபர்களுக்கு HMPV அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரில் 2 குழந்தைகள் மற்றும் குஜராத்தில் 1 குழந்தைக்கும் இந்த தொற்று பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவத் தொடங்கி உலகையே ஆட்டி விட்டு சென்று விட்டது. அதன் பிறகு தற்போது இந்த வைரஸின் அறிகுறிகள் இந்தியாவில் தென்படுகின்றன.
சாதாரண காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் சிலர் HMPV வைரஸ் டெஸ்ட் எடுக்கின்றனர். இந்தப் பதிவில் HMPV சோதனைகளுக்கு எவ்வளவு செலவாகும்?, ஆய்வக கட்டணங்கள் எவ்வளவு? என்பது குறித்து பார்ப்போம்.

சமீபத்தில் நாக்பூரிலும் HMPV தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அன்று 2 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ் (HMPV) என்றால் என்ன?: HMPV என்பது ஒரு வைரஸ் ஆகும். இது காய்ச்சல், இருமல், தொண்டைப் புண் போன்ற லேசான அறிகுறிகளுடன் ஏற்படுகிறது. பெரும்பாலான ஆரோக்கியமான நபர்கள் போதுமான ஓய்வு மற்றும் நீர் சத்து கொண்டவராக இருந்தால் எளிதில் குணமடைந்து விடுகின்றனர். ஆனால் குழந்தைகள் வயதானவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
HMPV டெஸ்ட் எடுப்பதற்கான செலவு?: HMPV டெஸ்ட் எடுக்க பயோ ஃபயர் பேனல் போன்ற மேம்பட்ட கண்டறியும் முறைகள் தேவை. இதன் மூலம் HMPV உட்பட பல நோய்க்கிருமிகளை ஒரே டெஸ்ட்டில் கண்டறிய முடியும். இந்தியாவில் உள்ள பல தனியார் ஆய்வகங்கள் இந்த டெஸ்ட்-ஐ வழங்குகிறது. டாக்டர் லால் பாத்லேப்ஸ், டாடா 1எம்ஜி லேப்ஸ் மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் லேப் போன்ற முக்கிய ஆய்வகங்களில் ஒரு HMPV வைரஸ் தொற்றை கண்டுபிடிக்கும் RT PCR சோதனை செய்ய ரூ.3,000 முதல் ரூ.8,000 வரை இருக்கலாம்.
HMPV, அடினோவைரஸ், கொரோனா வைரஸ் 229E மற்றும் கொரோனா வைரஸ் HKU1 ஆகியவற்றை உள்ளடக்கிய டெஸ்ட் எடுக்க, மொத்த செலவு ரூ.20,000 வரை இருக்கலாம்.
HMPV சிகிச்சை: தற்போது, HMPV சிகிச்சைக்கு குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. லேசான அறிகுறிகளைக் கொண்ட பெரும்பாலான நபர்கள் ஓய்வுடன் வீட்டிலேயே தங்களைப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் அறிகுறிகள் மோசமடைந்தால், சிக்கல்களைத் தடுக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications