டெல்லி: இந்தியாவில் கடந்த இரு வாரங்களாகவே விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்ற செய்தி அடிக்கடி வந்த வண்ணம் இருக்கிறது. இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விமான சேவை நிறுவனங்களுக்கு இதன் மூலம் 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே இந்தியாவில் விமான சேவை வழங்கி வரக்கூடிய இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக போன் கால்கள் மூலம் தகவல்கள் வருகின்றன. இதனால் இந்த விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.

பின்னர் அவை போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் என தெரிய வந்து விமானங்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. ஆனால் இது போன்ற போலியான வெடிகுண்டு மிரட்டல்களால் விமான சேவை வழங்கக்கூடிய நிறுவனங்களுக்கு கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 200 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான அழைப்புகள் வந்துள்ளன. இதனால் விமானங்கள் தாமதமாக புறப்பட்டது, சில சமயங்களில் விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டது என பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதியிலிருந்து இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் அழைப்பு வருவது வாடிக்கையாகிவிட்டதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கூறுகிறது. மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரான ராமமோகன் நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள் வந்ததன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு விமானங்கள் திசை திருப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
இவ்வாறு விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்படுவதன் மூலம் கூடுதலான எரிபொருளை அவை பயன்படுத்த வேண்டி இருக்கின்றன. பின்னர் பயணிகளை ஹோட்டலில் தங்க வைப்பது அல்லது அவர்களுக்கு உரிய இழப்பீடனை வழங்குவது, விமானத்தை முழுமையாக சோதனை செய்துவிட்டு மீண்டும் இயக்குவது என பல்வேறு செலவினங்கள் விமான சேவை நிறுவனங்களுக்கு ஏற்படுகின்றன.
இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் வரும் சமயங்களில் விமானங்கள் அவசரமாக ஒரு குறிப்பிட்ட விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் போது அதற்கான பார்க்கிங் கட்டணத்தையும் சம்பந்தப்பட்ட விமான நிலையத்திற்கு அவை செலுத்த வேண்டுமாம்.
எனவே இவை அனைத்தும் இணைந்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விமான சேவை வழங்கக்கூடிய நிறுவனங்கள் கூறுகின்றன. இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா, ஆகாசா ஏர் உள்ளிட்ட அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் கடந்த வாரத்தில் வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள் வந்தன.


Click it and Unblock the Notifications