அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் டிசம்பர் மாதம் 8-9 ஆகிய தேதிகளில் நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் வரையில் உயர்த்தும் எனக் கணிக்கப்படுவதால் ஒட்டுமொத்த முதலீட்டுச் சந்தையும் பல்டி அடித்து வரும் இதேவேளையில், அமெரிக்காவுக்கு முன்பே இந்தியாவில் வட்டி விகிதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முக்கியமான காரணம் பணவீக்கம். இந்தியாவில் ரீடைல் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 6.09% ஆக உயர்ந்துள்ளது. எல்நினோ, கச்சா எண்ணெய் விலை, ரூபாய் மதிப்பு சரிவு என பல காரணத்தால் நாட்டின் ரீடைல் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த 6.09 சதவீதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச பணவீக்க இலக்கு என்பதால், இந்த இலக்கை கடந்துவிட்ட நிலையில் தற்போதும் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.
மேலும் இந்தியாவில் தொடர்ந்து 9வது மாதமாகப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பணவீக்க அளவை கட்டுப்படுத்த ஆர்பிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காரணத்தால், டிசம்பர் மாதம் 2-4 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கும் இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தைக் குறைந்தபட்சம் 0.25 சதவீதம் வரையில் உயர்த்தலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அக்டோபர் மாதம் ஆர்பிஐ 3 வருடங்களுக்குப் பின்பு முதல் முறையாக ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி 5.50 சதவீதமாக அறிவித்தது.
இந்த நிலையில் மீண்டும் பணவீக்கம் அதிகரித்துள்ளதாலும், அதிகபட்ச இலக்கை தாண்டியுள்ள காரணத்தாலும் கட்டாயம் ரெப்போ விகிதத்தை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் ஆர்பிஐ உள்ளது.
இதேவேளையில் ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த நாணய கொள்கை கூட்டத்திலேயே குறுகிய காலத்தில் வட்டி குறைப்பு இருக்காது என்றும், இனி வரும் காலத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் அல்லது தற்போதைய 5.50 சதவீத நிலையில் தொடரலாம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டியை உயர்த்தினால் வீட்டுக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான EMI அதிகரிக்கும். ஏற்கனவே பல வங்கிகள் புதிதாக வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த துவங்கியிருக்கும் வேளையில் மீண்டும் ரெப்போ விகிதம் உயர்வு என்றால் வீட்டுக் கடன் வாங்கிய சாமானிய மக்களின் ஈஎம்ஐ பெரிய அளவில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications