வாடகை வீட்டில் வசிக்கும் மிடில் கிளாஸ் மக்களுக்கு சொந்த வீடு கட்டுவது என்பது வாழ்நாள் கனவு. ஆனால் விலைவாசி அவர்களுக்கு ஏதுவாக இல்லை. இதற்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட செங்கல், ஜல்லியின் விலை இன்று இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இப்படி இருக்கையில் பலருடைய வீடு வாங்கும் கனவையும் நிறைவேற்றும் விதமாக வங்கிகள் ஹோம் லோன்களை வழங்குகின்றன.
ஹோம் லோன் என்பது வீட்டை பிணையமாக வைத்து பெறப்படும் கடன். இதற்கு அந்தந்த வங்கிகளுக்கு ஏற்ப வட்டியும் வசூலிக்கப்படும். ஹோம் லோன் வாங்கிய பிறகு மாதா மாதம் இஎம்ஐ செலுத்த வேண்டும். ஏதேனும் ஒரு தவணையை தவறவிட்டாலும் அதற்கு அபராதத்தோடு சேர்த்து செலுத்த வேண்டி வரும். இந்நிலையில் ஒருவர் இரண்டு மூன்று தவணைகளை தவறவிட்டால் என்னவாகும்? வங்கிகள் எப்போது உங்களுடைய வீட்டை ஏலத்தில் விடும்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு இந்தப் பதிவில் விடையைப் பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் ஒரு வீட்டை சொந்தமாக்கி கொள்வது அவ்வளவு எளிதான விஷயமாக இல்லை. இருப்பினும் வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் மூலம் ஓரளவுக்கு தங்கள் கனவை மக்கள் நிறைவேற்றிக் கொள்கின்றனர். அப்படி வாங்கும் கடனுக்கு நீங்கள் சரிவர ஈஎம்ஐ செலுத்த வேண்டும். நீங்கள் சரிவர இஎம்ஐ செலுத்தவில்லை என்றால் வங்கிகள் உங்களுடைய வீட்டை ஏலத்தில் விட்டுவிடும்.

எத்தனை ஈஎம்ஐ தவணை தவறினால் வங்கிகள் நடவடிக்கை எடுக்கும்?: நீங்கள் ஒன்று அல்லது இரண்டு ஈஎம்ஐ தவணைகளை செலுத்தாமல் இருந்தால், வங்கிகள் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காது. முதலில் உங்களிடம் தொலைபேசி அழைப்பு விடுத்து நிலுவைத் தொகையை செலுத்துமாறு வங்கி ஊழியர்கள் கேட்பார்கள். உங்கள் இஎம்ஐ நிலுவையில் உள்ளது என்பதை நினைவூட்டும் விதமாக மீண்டும் மீண்டும் மெசேஜ் மற்றும் அழைப்புகளை மேற்கொள்வார்கள்.
தொடர்ந்து மூன்று மாதங்கள் நீங்கள் இஎம்ஐ செலுத்தாமல் இருந்தால் வங்கிகள் உங்களுடைய சொத்தை செயல்படாத சொத்தாக அறிவித்துவிடும். பின்னர் சட்ட ரீதியான நடவடிக்கையைத் தொடங்கும். சர்ஃபேசி சட்டம் 2002-இன் கீழ் வங்கி முதலில் கடன் பெற்றவருக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கும். உங்களுக்கு ஒரு நோட்டீஸையும் அனுப்பும்.
இதில் நீங்கள் ஈஎம்ஐ தொகையை செலுத்தி விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. அப்போதும் நீங்கள் ஈஎம்ஐ செலுத்தவில்லை என்றால், உங்களுடைய சொத்தை வங்கிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடும். இது போன்ற சூழ்நிலையில் உங்களுடைய சொந்த வீட்டை சீல் வைக்கும் அதிகாரமும் வங்கிகளுக்கு உண்டு.
ஆனால் வங்கிகள் அவசர அவசரமாக இந்த நடவடிக்கையை எடுக்காது. முறையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கும். அதன் பின்னரே இது போன்ற நடவடிக்கையில் இறங்கும். முதலில் உங்களிடம் இருந்து இஎம்ஐ தவணையை வசூலிப்பதற்கே வங்கிகள் முற்படும். இருப்பினும் கடன் பெற்றவர் வங்கிக்கு தக்க பதிலளிக்கவில்லை எனும் பட்சத்தில் வங்கிகள் அவருடைய சொத்தை ஏலம் விடும் செயல்முறையை கையில் எடுக்கும்.
பொதுவாக 5 மாதங்களுக்குப் பிறகுதான் இந்த செயல்முறை தொடங்கும். முதலில் வங்கிகள் சொத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்து கொள்ளும். பின்னர் நிலுவையில் உள்ள கடன் தொகையை மீட்டெடுக்க ஏலம் விடபடுவதற்கு முன்னர் வரை முயற்சி செய்யும். ஏலம் விடப்படுவதற்கு முன்னரே முழு தொகையையும் செலுத்தி விட்டால் பிரச்சனை இல்லை. அப்படி இல்லாத பட்சத்தில் வங்கிகள் உங்களுடைய வீட்டை ஏலம் விட்டுவிட்டு, கடன் தொகையைக் கழித்துக் கொண்டு மீதம் இருக்கும் தொகையை உரியவரிடமே ஒப்படைக்கும்.


Click it and Unblock the Notifications