வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தை நடத்தும் போது ஈஎம்ஐ உயர்ந்துவிடுமோ என்ற அச்சம் இருக்கும், சமீபத்தில் அக்டோபர் மாத துவக்கத்தில் நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து ரெப்போ விகிதத்தை 5.50 சதவீதமாக உயர்த்தியது.
இந்த நிலையில் 2027ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்குள் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என டாய்ச் வங்கி கணித்துள்ளது. அதாவது அக்டோபர் மாத உயர்வையும் கணக்கிட்டால் மொத்தமாக 1 சதவீதம் வரையில் ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என டாய்ச் வங்கி தெரிவித்துள்ளது.

ஏன் ஆர்பிஐ இப்படி அதிரடியாக ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து உயர்ந்து வரும் காரணமாகக் கடினமான நாணய கொள்கையை ஆர்பிஐ கடைப்பிடிக்கும் என டாய்ச் வங்கி தனது கணிப்பில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், டிசம்பர் மாதமும், 2027ஆம் ஆண்டின் அரையாண்டில் நடக்கும் கூட்டங்களில் 0.50 சதவீதம் அளவில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என டாய்ச் வங்கி கணித்துள்ளது.
இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் வேளையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது தொடர்ந்து 7 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து நிலைகொண்டு இருக்கிறது, இதனால் நாணய கொள்கையில் கட்டாயம் கட்டுப்பாடு அவசியம் என்பதை உணர்ந்து ஆர்பிஐ அதிரடியான போக்கைக் கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் என்பது அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் சராசரியாக 6 சதவீதமாகவும், 2027ஆம் நிதியாண்டில் 5 சதவீதமாகவும், 2028ஆம் நிதியாண்டில் 4.7 சதவீதமாகவும் இருக்கும் எனவும் டாய்ச் வங்கி கணித்துள்ளது.
மேலும் தீபாவளிக்குப் பின்பு கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் தற்போது கணிக்கப்பட்ட பணவீக்கத்தைக் காட்டிலும் அதிகமாக உயரும் எனவும், நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 11 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications