2023 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் அதிகம் விவாதித்த விஷயங்களில் முக்கியமான ஒன்று வீட்டு வாடகை. இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த வருடம் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுவதைக் கட்டாயமாக்கிய நிலையில், கொரோனா தொற்றுக் காலத்தில் பெரு நகரத்தை காலி செய்து விட்டு சொந்த ஊருக்குச் சென்றவர்கள் அனைவரும் திரும்பி வந்தனர்.
இந்தக் காரணத்தால் வாடகைக்கு வீடு கிடைக்காமல் டிமாண்ட் அதிகரித்து, வீட்டு வாடகை தாறுமாறாக உயர்ந்தது. இந்தப் பிரச்சனை இந்தியா முழுவதும் இருந்தது குறிப்பிடத்தக்கது, இதன் வாயிலாக 2023 ஆம் ஆண்டில் வீட்டு வாடகை அதிகளவில் உயர்ந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த வருடம் பெங்களூரில் தான் வீட்டு வாடகை அதிகப்படியாக உயர்ந்துள்ளது என இரண்டு ஆய்வுகளின் முடிவுகள் அடித்துச் சொல்கிறது. 2023 ஆம் ஆண்டின் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் ரியல் எஸ்டேட் துறை குறித்த முக்கியமான ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளது.
பிரபல ரியல் எஸ்டேட் தேடல் தளமான No Broker மற்றும் ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான Anarock ஆகியவை வீட்டு வாடகை குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் இந்தியாவிலேயே பெங்களூரில் தான் வாடகை பெரிய அளவில் அதிகரித்துள்ளது எனக் கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவின் பெரும் ஐடி நகரமான பெங்களூரில் முக்கியப் பகுதிகளில் வீட்டு வாடகை சுமார் 30 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது என அறிவித்துள்ளது. இதில் என்ன கொடுமை என்றால் பெங்களூர் வீட்டு உரிமையாளர்கள் இந்த வாடகை உயர்வைப் பார்த்து ஏற்கனவே வீட்டில் குடியிருக்கும் நபர்களின் வாடகையை 5000 முதல் 10000 ரூபாய் உயர்த்தியது, இதை ஏற்றுக்கொள்ள வாடகைதாரர்களை வீட்டு விட்டு காலி செய்யவும் வற்புறுத்தியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் பெங்களூரு மற்றும் மும்பையில் உள்ள ஏழு சதவீத வீட்டு உரிமையாளர்கள் வாடகையை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளனர். இதேபோல் பெங்களூரில் கணக்கெடுக்கப்பட்ட 52 சதவீத வீட்டு உரிமையாளர்கள் வாடகையிலிருந்து வரும் வருமானத்தையே முழுமையாக நம்பியுள்ளனர் என்று நோ புரோக்கர் தளம் தெரிவித்துள்ளது. அதாவது வீட்டை வாடகை விடுவதையே முழுப் பிஸ்னஸாகச் செய்கின்றனர்.
மறுபுறம், அனரோக்கின் அறிக்கையின்படி, 2023 இன் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவில் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரத்தில் அதிகபட்சமான வாடகை உயர்வு பதிவாகியுள்ளது. மேலும் பெங்களூரில் சுமார் 1,000 சதுர அடியில் நிலையான 2BHK பிளாட் பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் வாடகை 31 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், சர்ஜாபூரில் உள்ள வீடுகளின் வாடகை 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் டெல்லி என்சிஆர், மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் வீட்டு வாடகை 9 முதல் 14 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications