'சொந்தமாக ஒரு வீடு' ஆண்டுகள் பல ஓடியும் இதுவரை அது கானல் நீராகத்தான் பெரும்பாலான மக்களுக்கு உள்ளது, ஆனால் அந்தக் கனவு விரைவில் நனவாகும் காலம் நெருங்கி வருகிறது. கையில் ஓரளவு காசு இருந்தால் அதை முன்பணமாக வைத்து வங்கிகள், ஹவுசிங் சொசைட்டிகள் மூலம் மக்கள் இப்போது எளிதாக வீட்டுக் கடன் வாங்கி தங்களுக்கென்று ஒரு கனவு இல்லத்தை உருவாக்கி வருகின்றனர்.
தற்போது வீட்டுக் கடனுக்கான மாதத் தவணைத் தொகைக்கும் வீட்டு வாடகைத் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம் கணிசமாகக் குறைந்து வருவதால், வாடகை கட்டுவதற்குப் பதிலாக ஏன் சொந்த வீடு கட்டக் கூடாது என்ற நினைப்பு மக்களிடையே பெருகி விட்டது.

வீட்டுக் கடன்களுக்கு பல்வேறு சலுகைகளும், ஆர்பிஐ 2024 ஆம் ஆண்டுக்குள் ரெப்போ விகிதத்தை குறைக்க உள்ளதால், எப்படியும் தங்களுக்கென சொந்த வீட்டைக் கட்டி முடிக்க வேண்டும் என்று பலர் கங்கணம் கட்டி வருகின்றனர். மக்களின் இந்த திடீர் முடிவுக்கு முக்கியமான காரணம் தாறுமாறாக அதிகரித்து வரும் வீட்டு வாடகை தான்.
இந்நிலையில் பிரபல ரியல் எஸ்டேட் இணைய தளமான NoBroker வெளியிட்ட தகவல்படி 65 சதவீத இந்தியர்கள் 2024 ஆம் ஆண்டில் இஎம்ஐ அடிப்படையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகக் கூறியுள்ளது. விலை கட்டுபடியாகும் அளவில் இருப்பதாலும், அசையா சொத்து அளிக்கும் வாழ்க்கைப் பாதுகாப்பு போன்ற காரணங்களாலும் சொந்த வீட்டுக் கனவை தூண்டிவிட்டுள்ளது.
நோபுரோக்கர் தளம் சுமார் 32 ஆயிரம் பேரிடம் செய்த ஒரு ஆய்வின் முடிவில் அந்தத் தகவலை அளித்துள்ளது. இந்த ஆய்வில் 41 சதவீதம் பேர் வாடகை தருவதைவிட சொந்தமாக வீடு வாங்குவது புத்திசாலித்தனம் என்று கூறியுள்ளனர்.
பெங்களூரில் அதிகபட்சமாக வாடகை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 18 சதவீதமும், ஹைதராபாத்தில் 16 சதவீதமும் அதிகரித்துள்ளன. டெல்லி என்சிஆரில் 15 சதவீதமும் மும்பையில் 14 சதவீதமும் வாடகை அதிகரித்துள்ளது.
இந்த ஆய்வில் 27 சதவீதம் பேர் தங்களால் சொந்த வீடு வாங்க முடியும் என்பதால் அதைத் தேர்வு செய்வதாகக் கூறியுள்ளனர். 23 சதவீதம் பேர் அசையா சொத்து தங்களது வாழ்க்கைக்கு பாதுகாப்பு தரும் என்றும் தெரிவித்துள்ளனர். 9 சதவீதத்தினர் தாங்கள் திருமணம் செய்யவிருப்பதால் புதுவீடு வாங்க நினைப்பதாகக் கூறியுள்ளனர்.
வீட்டு உரிமையாளர்களிடம் செய்யப்பட்ட ஆய்வில் 56 சதவீதம் பேர் தங்களது வீட்டின் வாடகையை அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் தெரிவித்தள்ளனர். இதில் 35 சதவீதம் அதிகபட்சமாக 10-20 சதவீதம் அதிகரித்துள்ளனர், 33 சதவீதத்தினர் 20-30 சதவீதமும், 28 சதவீதத்தினர் 10 சதவீதத்துக்கும் குறைவாக உயர்த்தியுள்ளனர். மீதமுள்ள 4 சதவீதத்தினர் 30 சதவீதத்துக்கும் அதிகமாக வாடகையை உயர்த்தியுள்ளனர்.
வங்கிக் கடனில் சொந்த வீடு வாங்குவது வருமான வரியைச் சேமிக்கும் நல்லதொரு வழியாக இருப்பது மிக முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. இதனால் வேலை பார்க்கும் ஊழியர்கள் பெருமளவு பயனடைகின்றனர். ரூ.40 கோடிக்கு மேல் விலையுள்ள அல்ட்ரா-சொகுசு வீடுகள் விற்பனை 2023இல் மிகக் கணிசமாக உயர்ந்துள்ளது.
மும்பையில் அதிகபட்சமாக ரூ.40 கோடியில் 53 வீடுகள் விற்பனையாகியுள்ளது. இந்த அல்ட்ரா சொகுசு வீடுகள் விற்பனையில் 91 சதவீதம் மற்ற நகரங்களில் நடைபெற்றுள்ளது.
எப்படிப்பார்த்தாலும் தங்களுக்கென்று ஒரு சொந்த வீட்டைக் கட்டிக் கொள்வது புத்திசாலித்தனம் என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications