இந்தியாவில் மெட்ரோ நகரங்களில் சொந்தமாக ஒரு இரண்டு படுக்கறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வாங்க வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதுவே இரண்டாம் நிலை நகரங்கள் என்றால் 80 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. தற்போது 50 லட்சம் ரூபாய்க்கு எல்லாம் வீடே இல்லை என்ற நிலைமை படிப்படியாக இந்தியாவில் உருவாகி வருகிறது.
நிலத்தின் மதிப்பும் வீடு கட்டுவதற்கான பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்கிறது ஆனால் அதற்கு ஏற்ற வகையில் மக்களின் வருமானம் உயர்ந்திருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. இந்தியாவில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தற்போது மலிவு விலை வீடுகளின் மீது கவனமே செலுத்துவது கிடையாது. அனைவருக்கும் வீடு என்று இலக்கை நோக்கி பயணித்து வரும் மத்திய அரசு மலிவு விலை வீட்டு திட்டங்களை ஊக்குவிக்கவும் , வீட்டு கடன் வாங்குவோருக்கும் சலுகைகளை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவை நினைவாக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பை வெளியிடுமா என்பதுதான் கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டினை பொருத்தவரை இந்திய ரிசர்வ் வங்கி 1.5% வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது. இதனை அடுத்து பல்வேறு வங்கிகளும் தங்களுடைய வீட்டுக் கடன்களுக்கான வட்டியை குறைத்தன. இதன் மூலம் இந்தியர்களால் லட்சக்கணக்கான பணம் சேமிக்க முடிந்தது.
அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் வீட்டு கடன் வாங்கியவர்களுக்கும், புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கும் ஏற்ற வகையிலான அறிவிப்புகளை வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக தற்போது வருமான வரி சட்டத்தின் பிரிவு 24 பி-இன் கீழ் ஒரு ஆண்டுக்கு வீட்டுக் கடனுக்காக நாம் செலுத்தக்கூடிய வட்டி தொகைக்கு 2 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடைக்கிறது. இதனை 5 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்த வேண்டும் என்பது வீட்டுக் கடன் வாங்கிய நபர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
தற்போது வீடுகளின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது, நாம் வாங்கக்கூடிய கடனின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்து விட்டது எனும் போது இந்த வரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது தான் என பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களும் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி பழைய வரி கணக்கு தாக்கல் முறையில் மட்டுமில்லாமல் புதிய வரி கணக்கு தாக்கல் முறையில் இந்த சலுகைகளை கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றனர் .
முதல்முறையாக சொந்த வீடு வாங்குவோருக்கு Section 80EEA பிரிவின் கீழ் கூடுதலாக 50,000 ரூபாய் வரி விலக்கு வழங்கப்பட்டது . ஆனால் 2022 மார்ச் மாதத்துடன் இது நிறுத்தப்பட்டது இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் இதனை புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறையிலும் சேர்க்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.வீட்டு கடன்கள் இன்னும் மலிவானதாகவும் முதன்முறை வீடு வாங்கக் கூடியவர்களுக்கு பல்வேறு சலுகைகள் தரக்கூடிய வகையிலும் மாற்றங்கள் தேவை என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications