பாகிஸ்தான் பொருளாதாரம் பெரும் நிதிநெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் எரிபொருள், மின்சாரம் முதல் பல பிரச்சனைகளை அந்நாட்டில் இருக்கும் நிறுவனங்களும், தொழிற்சாலைகள் எதிர்கொண்டு வருகிறது.
சீனா, ஐஎம்எப் நிதியுதவி செய்தாலும் தற்போதைய நிலையில் பாகிஸ்தான் நிதிநிலையை மேம்படுத்துவதற்கும் திவாலாவதில் இருந்து தப்பிக்கவும் மட்டுமே உதவுகிறது. இந்த புதிய நிதியுதவிகள் இன்னும் அந்நாட்டின் பொருளாதாரத்திலும், மக்கள் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் இயங்கி வரும் ஹோண்டா தொழிற்சாலையை மார்ச் 31 வரையில் தற்காலிகமாக மூட முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தானில் நிலவும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் 2வது கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா புதன்கிழமை தனது தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது. இது அந்நாட்டின் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு சந்தையை கட்டாயம் பாதிக்கும்.
ஹோண்டா அட்லஸ் கார்கள்
ஹோண்டா அட்லஸ் கார்கள் நிறுவனம் பாகிஸ்தான் நாட்டில் ஹோண்டா ஆட்டோமொபைல் கார்களை அசெம்பிளி செய்து வருகிறது. அந்நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் பணிவீக்கத்தின் காரணமாக அதிகப்படியான செலவுகள் ஆகியவற்றின் மூலம் அதன் தொழிற்சாலையை மார்ச் 9 முதல் 31 வரை மூடப்படும் என்று கூறியது.
மார்ச் 31 வரை
தற்போதைய பொருளாதார நிலையில் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் தொழிற்சாலை மார்ச் 31 வரையில் மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவை ஹோண்டா நிறுவனம் பாகிஸ்தான் பங்குச்சந்தைக்கு தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் பொருளாதாரத்தின் தற்போதைய நிலையில் ஹோண்டா அட்லஸ் கார்கள் நிறுவனத்தின் சப்ளை செயின் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
சுசூகி, டோயோட்டா
ஹோண்டா நிறுவனத்திற்கு முன்பு பாக் சுசூகி மோட்டார் கம்பெனி, டோயோட்டாவின் இன்டஸ் மோட்டார் கம்பெனி ஆகிய நிறுவனங்களும் தங்களது தொழிற்சாலையை தற்காலிகமாக மூடியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் பாகிஸ்தான் வெளிநாட்டு இறக்குமதியில் வைத்த கட்டுப்பாடு தான்.
பிரச்சனை
பாகிஸ்தான் நாட்டின் ஆட்டோமொபைல் உற்பத்தி துறை அதிகளவில் வெளிநாட்டு உற்பத்தி பொருட்களை நம்பியுள்ளது, இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் இத்துறையின் உற்பத்தியை கடுமையாக பாதிக்கிறது. இதேவேளையில் பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பு அதிகளவில் பாதிக்கப்படுவதால் உற்பத்தி செலவுகள் அதிகளவில் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications