தமிழ்நாடு அரசு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் மிக தீவிரமாக இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை பொறுத்தவரை தொழில் ரீதியாகவும் உற்பத்தி ரீதியாகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு நகரமாக இருக்கிறது .
டாடா, ஓலா, ஏத்தர், டிவிஎஸ் என பல்வேறு பெரிய முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய ஆலைகளை ஓசூரில் நிறுவி இருக்கின்றன. பெங்களூருக்கு அருகிலேயே இருப்பதால் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய அலுவலகங்களையும் ஆலைகளையும் ஓசூரில் நிறுவ தொடங்கி இருக்கின்றன .இந்த சூழலில் தான் தமிழ்நாடு அரசு விமான நிலையம் அமைத்தால் ஓசூர் நகரம் இன்னும் வளர்ச்சி அடையும் என முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறது.

ஓசூரில் விமான நிலையம் அமைத்தால் பெங்களூர் மக்களும் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய ஒரு விமான நிலையமாக இது மாறும். ஏற்றுமதி இறக்குமதிக்கான முக்கிய மையமாக ஓசூர் மாற்றம் அடையும். விமான நிலையம் இருந்தால் இன்னும் பல பெரிய நிறுவனங்கள் ஓசூரை தேடி வந்து முதலீடு செய்யும் அந்த வகையில் பார்க்கும்போது விமான நிலையம் ஓசூர் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஒரு உந்துதலாக அமையும் .
தமிழ்நாடு அரசு ஓசூர் -பேரிகை -பாகலூர்- சூளகிரி பகுதிகள் இணையக்கூடிய இடத்தில் விமான நிலையத்தை கட்டமைக்க முடிவு செய்திருக்கிறது . ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகளை கையாளக்கூடிய வகையில் இந்த விமான நிலையத்தை கட்டமைக்க அரசு திட்டமிட்டு இருக்கிறது. கடந்த மாதம் தான் தமிழ்நாடு அரசு ஓசூர் விமான நிலையத்திற்கான விரிவான தொழில்நுட்ப திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான கன்சல்டன்ட்டை தேர்வு செய்வதற்கு ஒப்பந்தம் அறிவித்தது.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், பாதுகாப்பு துறை அமைச்சகம் ஆகியவற்றிடம் அனுமதி கேட்டும் ஒரு புறம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஓசூர் விமான நிலையத்தை அமைக்க 2900 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது .இந்த 2900 ஏக்கர் நிலத்தில் 845 ஏக்கர் நிலம் ஏற்கனவே அரசுக்கு சொந்தமானதாக இருக்கிறது. மீதமுள்ள நிலம் தனியாரிடமிருந்து அரசு கையகப்படுத்த வேண்டி இருக்கிறது. இதில் விவசாய நிலங்களும் அடங்கும். மொத்தமாக ஓசூர் விமான நிலையத்தை கட்டமைக்க 2979 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது .
இதில் 10 கிராமங்கள் ஓசூர் தாலுகாவில் இருப்பதாகவும் மீதமுள்ள கிராமங்கள் சூளகிரி தாலுகாவில் இருப்பதாகவும் டெக்கன் ஹெரால்டு செய்தி வெளியாகியிருக்கிறது. பலவனப்பள்ளி, முதாலி, அடவனபள்ளி, தேசபள்ளி, அட்டூர்,காருபள்ளி , நந்திமங்கலம், வெங்கடேசபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது .
நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விரிவாக அறிக்கை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இதனை ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அனுப்பி வைப்பார். முதலமைச்சர் ஸ்டாலின் இது தொடர்பாக விரிவான அரசாணை வெளியிடுவார். அரசாணை வெளியிட்ட உடன் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும். பிப்ரவரிக்குள் இந்த பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தமிழ்நாடு அரசு எந்த தடை வந்தாலும் அதனை களைந்து ஓசூர் விமானநிலையம் அமைப்பதில் முடிவாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications