ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு நீண்ட காலமாகவே ஓசூர் பகுதியில் புதிதாக சர்வதேச விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் பெங்களூரில் ஒரு சர்வதேச விமான நிலையம் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக பெங்களூரு சர்வதேச விமான நிலையம் நிறுவனம் மத்திய அரசுடன் போட்டிருக்கும் ஒப்பந்தத்தில் 2033 ஆம் ஆண்டு வரை இந்த விமான நிலையத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவிற்குள் எந்த ஒரு புதிய விமான நிலையமும் அமைக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. இந்த சூழலில் அதிமுக எம்பி தம்பிதுரை ஓசூர் விமான நிலைய கோரிக்கையை மாநிலங்களவையில் முன் வைத்தார்.
அதற்கு பதில் அளித்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற மாநில அரசின் முயற்சிக்கு மத்திய அரசு பாசிட்டிவான அணுகுமுறையை பின்பற்றும் என பதில் அளித்தார்.
பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள அந்த ஒப்பந்தம் தான் இந்த விமான நிலையத்தை அமைப்பதற்கு ஒரு சவாலாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார். ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு இது தொடர்பாக மத்திய அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் பெங்களூரு விமான நிலைய நிறுவனம் ஆகிய மூன்றும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும் என கூறியுள்ளார். நாட்டில் முடிந்தவரை பல்வேறு விமான நிலையங்களை கொண்டு வர வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் விதத்தில் இந்த விமான நிலையம் இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
முன்னதாக மாநிலங்களவையில் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராம்மோகன் நாயுடு, தமிழ்நாட்டில் உடான் திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுவதாக கூறினார். நெய்வேலி மற்றும் வேலூரில் விமான நிலைய செயல்பாட்டுக்கான உரிமம் பெறும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ராமநாதபுரத்தில் மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications