தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருக்கும் ஓசூர்-பெங்களூர் இன்டர்ஸ்டேட் மெட்ரோ ரயில் திட்டம் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. ஓசூர் மற்றும் பெங்களூர் ஆகிய இரு நகரங்களும் தங்களது தொழில் மற்றும் வணிக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருவதால், இவ்விரு நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
பெங்களூரின் பொம்மசந்திரா பகுதியிலிருந்து தொடங்கி அட்டிபெல்லி வழியாக ஓசூரை இணைக்கும் வகையில் இந்த இன்டர்ஸ்டேட் மெட்ரோ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசால் முன்மொழியப்பட்ட இந்த திட்டம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த நிலையில், தற்போது இந்த திட்டத்துக்கான முக்கியமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஓசூர்-போம்மசந்திரா மெட்ரோ ரயில் திட்டம் தென்னிந்தியாவின் முதல் மாநிலங்களுக்கு இடையிலான மெட்ரோ ரயில் ஆகும். பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் (BMRC) தற்போது இந்த திட்டத்திற்கான விரிவான செயல் திட்ட அறிக்கையை (DFR) நடத்தி வருகிறது, இது 23 கிலோமீட்டர் நீளமும் 12 நிலையங்களும் ஒரு டெப்போவும் கொண்டதாக இருக்கும்.
இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில், ஓசூர் மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு இடையே உள்ள பயண நேரம் குறைந்து, போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும், இது இரு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். இந்த திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்தவும், ஏதுவான சூழ்நிலை உருவாக்கவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (BMRCL) இணைந்து பல கூட்டங்களை கடந்த 6 மாதத்தில் நடத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மற்றும் திருச்சி மெட்ரோ திட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், திருநெல்வேலிக்கு மெட்ரோ ரயில் திட்டம் தற்போது சாத்தியமில்லை என்று CMRL கண்டறிந்துள்ளது.
மெட்ரோ ரயில் சேவைகளை விரிவுபடுத்துவது நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்தவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் ஒரு முக்கியமான படியாகும். இந்த திட்டங்கள் முன்னேறும்போது, அவை பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications