பெங்களூருவில் கனமழையால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது பெங்களூருவாசிகளை கடும் சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது.
கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் பெங்களூருவில் ஓசூர் சாலையில் குறிப்பிட்ட பகுதி மூடப்படுவதாக பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஓசூர் சாலையில் சில்க் போர்டு முதல் ரூபென்னா அக்ரஹாரா வரையிலான பகுதியில் சாலை மூடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பெங்களூரு மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஓசூர் சாலை தற்காலிகமாக மூடப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

சில்க் போர்டு முதல் ரூபென்னா அக்ரஹாரா வரை ஓசூர் சாலையில் வாகனங்கள் இயக்கப்பட அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனையொட்டிய மேம்பாலமும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வாகன ஓட்டிகள் மாற்று சாலைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் ஓசூர் சாலையை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பெங்களூரு நகரில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ச் குறிப்பாக ஓசூர் சாலையின் பல மணி நேரங்களுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. மழை ஒரு பக்கம் போக்குவரத்து நெரிசல் ஒரு பக்கம் என வாகன நொடிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இந்த நிலையில் காலை 9 மணி அளவில் மூடப்பட்ட ஓசூர் சாலை 11 மணியளவில் திறக்கப்பட்டதாக பெங்களூர் மாநகர போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கான பயண நேரத்தை குறைக்கும் வகையில் தான் 9.9 கிலோமீட்டர் நீளம் கொண்ட எக்ஸ்பிரஸ்வே, சென்ட்ரல் சில்க் போர்டு ஜங்ஷனிலிருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை ஓசூர் சாலையில் கட்டப்பட்டு 2010 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறை கனமழை பெய்யும் போதும் இந்த சாலையில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாக நேரிடுகிறது.
வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருந்து சாலையிலேயே வாகனத்தை நிறுத்து விட்டு நடந்து செல்லும் காட்சிகள் எல்லாம் அரங்கேறின. பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் மழைநீர் தேங்காமல் தடுக்கவும் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்றவும் முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என பெங்களூரு வாசிகள் கடுமையாக சாடி வருகின்றனர். சமூகவலைதளங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள மோசமான அனுபவங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications