ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஓசூரில் விமான நிலையம் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல ஓசூரில் வர்த்தக மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது.
அண்மையில் கூட முதலமைச்சர் ஸ்டாலின் ஓசூருக்கு என பிரத்தியேகமாக நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன, 45 ஆயிரத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் இதன் மூலம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஓசூரை பொறுத்தவரை பல்வேறு நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளை கொண்டிருக்கக் கூடிய ஒரு நகரம் . டிவிஎஸ் மோட்டார், டாடா எலக்ட்ரானிக்ஸ், அசோக் லேலண்ட், டைட்டன் , ஓலா என எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் தொடங்கி வாகன உற்பத்தி வரை பல்வேறு நிறுவனங்களும் இங்கே செயல்படுகின்றன.
கிட்டதட்ட 3,000க்கும் அதிகமான MSME நிறுவனங்கள் செயல்படக்கூடிய ஒரு நகரமாகவும் ஓசூர் திகழ்ந்து வருகிறது. ஓசூரின் இந்த வளர்ச்சியை தக்க வைக்கவும் மேற்கொண்டு நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்வதை உறுதி செய்யும் தமிழ்நாடு அரசு விமான நிலையம் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஓசூரில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த மார்ச் மாதமே தமிழ் நாடு அரசு வெளியிட்டது.
டைடல் பார்க் மூலம் பல்வேறு ஐடி நிறுவனங்களும் இங்கே தங்களுடைய நிறுவனங்களை செயல்படுத்த தொடங்கும். இது ஓசூர் நகரத்தின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு மைல்கல்லாக அமையும் என தமிழ்நாடு அரசு கருதுகிறது. ஓசூரில் அறிவுசார் வழித்தடம் அமைக்கும் பணிகளை அரசு முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக டைடல் பார்க் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த டைடல் பார்க் என்பது அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 6600 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியை ஒரு மாடலாக கொண்டு ஓசூரை ஐடி நகரமாகவும் உற்பத்திக்கான நகரமாகவும் மாற்ற அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஓசூர் டைடல் பார்க் அமைப்பதற்கான வடிவமைப்பு மற்றும் பொறியியல் பணிகளுக்கான ஒப்பந்தத்தை Voyants Solutions என்ற நிறுவனம் கையகப்படுத்தி இருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே ஓசூர் டைடல் பார்க்கிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டைடல் பார்க் அமைக்கப்பட்டால் பல்வேறு ஐடி நிறுவனங்களும் ஓசூரை நோக்கி வரும். குறிப்பாக பெங்களூருவில் ஏற்கனவே பல்வேறு உள்கட்டமைப்பு பிரச்சனைகள் போக்குவரத்து பிரச்சனைகள் இருக்கக்கூடிய சூழலில் ஐடி நிறுவனங்கள் ஓசூரை நோக்கி வருவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகரித்து இருக்கிறது .


Click it and Unblock the Notifications