தமிழ்நாடு அரசு ஓசூர் நகரை மையமாகக் கொண்டு பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு இருக்கிறது . இதன் ஒரு பகுதியாக தான் நாளைய தினம் ஓசூரில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட இருக்கிறது.
முதலீட்டாளர் மாநாடு: ஓசூர் நகரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. இதற்காக இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அதே வேளையில் ஓசூரில் தொழில்துறை மேம்பாட்டுக்காக நாளைய தினம் முதலீட்டாளர் மாநாடும் நடத்தப்பட்டு நடத்தப்பட உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.

40 ஒப்பந்தங்கள் கையெழுத்து: தமிழ்நாடு அரசு ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தை மையமாக கொண்டு ஒரு முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது. இதன் அடுத்த கட்டமாக ஓசூரை மையமாக கொண்டு நாளைய தினம் முதலீட்டாளர் மாநாடு நடைபெற இருக்கிறது . இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 40 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாக தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்திருக்கிறார்.
உற்பத்தி மையமாகும் ஓசூர்: பொறியியல், எலக்ட்ரானிக்ஸ், வாகன உற்பத்தி, மின்சார வாகன உற்பத்தி, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என டிஆர்பி ராஜா ஆங்கில இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் சுட்டிக்காட்டி இருக்கிறார். சென்னை பெங்களூர் தொழில் வழித்தடத்தில் ஓசூர் மிக முக்கியமான ஒரு இடத்தில் அமைந்து இருக்கிறது என கூறி இருக்கும் அவர் ஓசூர் நகரம் ஏற்கனவே வலுவான வாகன உற்பத்தி ,மின்சார வாகன உற்பத்தி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியின் மையமாக இருக்கிறது இதனை மேலும் வளர்ச்சி அடைய செய்வது தான் தமிழ்நாடு அரசின் நோக்கம் எனக் கூறியிருக்கிறார்.
ஏர்போர்ட்: ஏற்கனவே அரசு ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தீவரப்படுத்தி இருக்கிறது ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் இந்த விமான நிலையத்தை அமைக்க அரசு முடிவு செய்து இருக்கிறது என கூறும் அவர் சென்னை ஓஎம்ஆர் சாலையை ஒரு மாடலாக கொண்டு ஜிசிசி மையங்கள் மற்றும் ஆர் &டி மையங்கள் ஓசூரை நோக்கி வருவதை இலக்காக வைத்து Hosur knowledge corridor என்பதை உருவாக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.

டைடல் பூங்கா:இது தவிர ஓசூரில் ஒரு டைடல் பூங்காவை நிறுவ இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஓசூரில் புதிய விமான நிலையம் அமைந்தால் உலக அளவிலான ஏற்றுமதி இறக்குமதி மையமாக ஓசூர் நகரம் மாறும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இதற்கிடையே ஓசூருக்கு என பிரத்தியேகமாக டிரேட் சென்டர் எனப்படும் வர்த்தக மையமும் அமைக்க அரசு முடிவு செய்து இருக்கிறது .
டிரேட் சென்டர்: இதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மேம்பாட்டு கழகமான டிட்கோ ஓசூரில் 27.36 ஏக்கர் பரப்பளவில் சூளகிரி தாலுகாவில் இருக்கும் சென்னம்பள்ளி என்ற கிராமத்தில் இடத்தை தேர்வு செய்துள்ளது. இங்கே வர்த்தக மையம் கட்டப்படுவதற்கான விரிவான திட்ட ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியிருக்கிறார் .
ஏற்கனவே டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பாக அவர்களின் ஊழியர்களுக்கு பிரத்தியேகமாக 64 ஏக்கர் பரப்பளவில் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் இருக்கும் நாகமங்கலம் கிராமத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications