அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தப் போர் காரணமாக இந்தியாவில் மிகக் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
வணிக சிலிண்டர் கட்டுப்பாடு காரணமாக ஏராளமான இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. செயல்படக்கூடிய சொற்ப எண்ணிக்கையிலான உணவகங்களும் கூட விற்பனை செய்யக்கூடிய உணவுகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டன. தோசை, ஆம்லெட் , மீல்ஸ் ஆகியவை இனி கிடையாது என அறிவிப்பு பலகையை வைத்துவிட்டன. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் உணவகங்களுக்கு வணிக சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி வைத்திருப்பதே உணவகங்கள் மூடப்படுவதற்கு முக்கிய காரணம்.

ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவிற்கு எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் கொண்டு வரப்படாத சூழலில் கையிருப்பை வைத்துக்கொண்டு வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற நோக்கத்தில் எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திவிட்டன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான உணவகங்கள் மூடப்பட்டு இதனை நம்பி இருக்கக்கூடிய லட்சக்கணக்கான மக்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் எரிவாயு தட்டுப்பாடு ஆட்டோ ஓட்டுநர்களையும் பெருமளவில் தாக்கத் தொடங்கி இருக்கிறது. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக எல்பிஜி நிலையங்களில் எரிவாயு கிடைக்காமல் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் தவிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். சென்னை உட்பட பல்வேறு பகுதிகளிலும் எல்பிஜி நிலையங்களில் ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது.

எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதிப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் எல்பிஜி கேஸ் நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. இதனால் ஆட்டோக்களுக்கு கேஸ் நிரப்ப முடியாமல் ஆட்டோ ஓட்டுநர்கள் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு மிக மோசமான ஒரு சூழலை மக்கள் எதிர்கொள்ள தொடங்கியுள்ளனர். பெட்ரோல் விலையை விட எல்பிஜி மூலம் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு செலவு குறைவு என்பதால் அண்மைக்காலமாகவே ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களுடைய ஆட்டோக்களை எல்பிஜி மூலம் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றிவிட்டார். தற்போது திடீரென ஆட்டோ எல்பிஜி தட்டுப்பாடு நிலவுவதால் ஆட்டோ ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல மணி நேரம் வரிசையில் நின்றும் கேஸ் கிடைக்காமல் வீடுகளுக்கு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதனால் ஆட்டோ ஓட்டுநர்களின் தினசரி வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஆட்டோக்களை நம்பி இருக்கக்கூடிய மக்களும் பாதிப்படைந்து இருக்கின்றனர்.சாமானிய மக்களுக்கு ஒரு புறம் ஹோட்டல் உணவுகளும் கட், ஆட்டோ பயணங்களும் கட். கேஸ் கிடைக்காமல் நகரத்தில் இயங்கும் ஆட்டோக்களின் எண்ணிக்கை குறையும். இதனால் டிமாண்ட் அதிகரித்து ஆட்டோ கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications