பெங்களூர்: இந்தியாவில் சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் மாதம்தோறும் வீட்டு வாடகைகளின் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் பெங்களூரில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வீட்டு வாடகை மதிப்பு 90% உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் மற்றும் ஐடி தலைநகரமாக கருதப்படும் பெங்களூரில் வழக்கமாகவே வீடுகளுக்கான ரியல் எஸ்டேட் மதிப்பும் வீட்டு வாடகையும் உயர்ந்த வண்ணமே இருக்கிறது.
கொரோனா தொற்றின் போது பலரும் வீட்டிலிருந்து பணிபுரிந்ததால் அந்த காலகட்டத்தில் மட்டும் வாடகை வீடுகளுக்கான தேவை குறைந்து வீட்டு வாடகையும் உயராமல் இருந்தது. ஆனால் தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என அறிவித்துள்ளன. இதன் காரணமாக பெங்களூரில் மீண்டும் வீடுகளின் வாடகைகள் உயர்ந்து வருகின்றன.

இந்திய அளவில் வீட்டு வாடகை வேகமாக அதிகரிக்கும் ஒரு நகரமாக பெங்களூர் இருந்து வருகிறது. அண்மையில் பெங்களூரில் வீட்டு வாடகை நிலவரம் தொடர்பான ஒரு ஆய்வு அறிக்கையை Anarock Research வெளியிட்டுள்ளது. அதில் பெங்களூரின் பாகலூர் பகுதியில் மட்டும் கடந்த நான்காண்டு காலத்தில் வீடு வாடகை 90% உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக ஒயிட் ஃபீல்டு ,சர்ஜாபூர் ரோடு ஆகிய பகுதிகளிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் வீட்டு வாடகை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இந்த பகுதிகளில் வீட்டு வாடகைகள் மதிப்பு 80 முதல் 85 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஹைதராபாத் ,டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களோடு ஒப்பிடும் போது வீட்டு வாடகை மதிப்பு வேகமாக உயர்வது பெங்களூர் நகரத்தில் தான் என Anarock Research கூறுகிறது. அதுமட்டுமின்றி கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலகட்டத்தில் பெங்களூரில் வீட்டு மனைகளின் விலையும் உயர்ந்திருக்கிறது.
2019 ஆம் ஆண்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சதுர அடியின் விலை 4300 என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது ஒரு சதுர அடியின் விலை 8,151 ரூபாய் என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. அதுமட்டுமின்றி கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு ஆகியவை காரணமாக புதிய வீடுகளின் விலை அதிகரித்திருப்பதாகவும் அதன் காரணமாக வீடுகளின் வாடகை உயர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பெங்களூரை பொறுத்தவரை வடக்கு பெங்களூர், ஒயிட் பீல்டு மற்றும் சர்ஜாபூர் ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications