சிங்கப்பூர்: திடீரென நிகழும் சில சம்பவங்கள் நம் வாழ்க்கையை புரட்டி போட்டு விடும். அந்த வகையில் ஒரு நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக தன்னுடைய வாழ்க்கை முறையையே மாற்றி முற்றிலும் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் மாறி இருக்கிறார் இந்த தலைமை செயல் அதிகாரி..
ஹவுசிங்.காம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான துருவ் அகர்வால் கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருடைய உடல் எடை 152 கிலோ. தன்னுடைய ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள் மூலம் உடல் எடை கூடியதோடு பல்வேறு இன்னல்களுக்கும் ஆளானதை உணர்ந்துள்ளார்.
சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படும் ப்ரீ- டயாபிடிக், அதிக கொலஸ்ட்ரால், அதிக ரத்த அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பிரச்னைகளால் அவர் தவித்து வருவதை உணர்ந்து, இனி முற்றிலும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என முடிவெடுத்தார். அதனை விடாமல் கடைப்பிடித்த அவர், இரண்டு ஆண்டுகளில் 71 கிலோ உடல் எடை குறைந்துள்ளார்.
53 வயதான துருவ் தற்போது ஆரோக்கியமாக இருப்பதுடன் தன்னுடைய தன்னம்பிக்கை பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார். உயர் ரத்த அழுத்தம் . கொழுப்பு , தூக்கமின்மை ஆகிய பிரச்னைகள் நீங்கி விட்டது என கூறும் அவர், இதற்கு உணவு பழக்கவழக்கத்தை மாற்றியதும் முறையாக உடற்பயிற்சி மேற்கொண்டதுமே காரணம் என கூறுகிறார்.
உடல் எடை குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்டிரெந்த் டிரைனிங் மேற்கொண்டதாகவும் வாரத்திற்கு மூன்று முறை தனிப்பட்ட முறையில் ஒரு பயிற்சியாளரை நியமித்து முறையாக பயிற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு 12,000 ஸ்டெப்ஸ் நடப்பதை பழக்கப்படுத்தி கொண்டதாகவும் ஒரு நாள் கூட அதனை தவற விடுவதில்லை என்றும் கூறுகின்றார். டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு ஃபிட்னஸ் ஜர்னியை தொடர்ந்ததாக கூறியுள்ளார்.
ஒரு நாளைக்கு 1,700 கலோரிகளை உணவின் மூலம் எடுத்து கொண்ட அவர், எண்ணெயில் வறுத்த உணவுகள், சமோசா தோசை போன்றவற்றைத் தவிர்த்துள்ளார். உணவில் அதிக புரோட்டீனை எடுத்துக் கொண்டதாகவும், காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உட்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
காண்போர் பிரமிக்கும் வகையில் உடல் எடை குறைந்துள்ள துருவ் அகர்வாலா, உடல் எடை குறைய வேண்டும் என நினைப்பவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications