சென்னை: இந்தியாவில் பிரதான நகரங்களில் வீடுகளின் மதிப்பு 23 சதவீதம் வரை உயர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. Anarock என்ற நிறுவனம் இந்தியாவின் பிரதான நகரங்களில் வீடுகளின் விற்பனை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு ஆடம்பர குடியிருப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளதாம். மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ,சென்னை , புனே, கொல்கத்தா ஆகிய நகரங்களில் வீடுகளின் மதிப்பு 23 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

2024-25 ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் இந்த நகரங்களில் விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் சராசரி மதிப்பு 1.23 கோடி ஆகும். இது கடந்த ஆண்டு 1 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது இது 23 சதவீதம் என அதிகரித்துள்ளது என்கிறது அனராக் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பிரதான நகரங்களில் 2,27,400 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 2, 79,399 கோடி ரூபாய் ஆகும். இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 2,35 ,200 வீடுகள் விற்பனையாகி அவற்றின் மதிப்பு 2 ,35, 800 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக வீடுகளின் விற்பனை மூன்று சதவீதம் குறைந்து இருந்தாலும் அவற்றின் விற்பனை மதிப்பு கடந்த ஆண்டு விட தற்போது 18 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக ஆடம்பர குடியிருப்புகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.
பெங்களூருவில் தான் வீடுகளின் மதிப்பு அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 84 லட்சம் ரூபாய்க்கு பெங்களூருவில் சராசரியாக வீடுகளின் மதிப்பு இருந்து நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் 1.21 கோடி என உயர்ந்துள்ளது. பெங்களூருவில் நடப்பு ஆண்டில் 31,440 வீடுகள் விற்பனையாகியுள்ளன அவற்றின் மதிப்பு 26,274 கோடி ரூபாய் ஆகும்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சென்னையில் 72 லட்சம் ரூபாயாக இருந்த வீடுகளின் மதிப்பு நடப்பு ஆண்டில் 95 லட்சம் என உயந்துள்ளது. சென்னையில் நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 9,531 வீடுகள் விற்பனையாகியுள்ளன, அவற்றின் மதிப்பு 9000 கோடி ரூபாய் ஆகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சென்னையில் 10,435 வீடுகள் விற்பனையாகியிருந்தன அவற்றின் மதிப்பு 7,516 கோடி ரூபாய் என்கிறது இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை.
ஐதராபாத்தில் கடந்த நிதியாண்டில் முதல் 6 மாதத்தில் சராசரியாக வீடுகளின் விலை 84 லட்சம் ரூபாயாக இருந்து தற்போது 1.15 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது. மும்பையில் வீடுகளின் மதிப்பு கடந்த ஆண்டை போலவே சராசரியாக 1.47 கோடி ரூபாய் என நீடிக்கிறது.


Click it and Unblock the Notifications