தேவையில்லை என்று தூக்கி எறியப்படும் பொருளை வைத்தே கோடீஸ்வரராக மாறி இருக்கின்றனர் பிஹாரைச் சேர்ந்த 3 நண்பர்கள். ஆம் விவசாயிகள் வேண்டாம் என்று ஒதுக்கி போடும் வாழைத்தண்டுகளைப் பயன்படுத்தி ஜகத் கல்யாண், சத்தியம் குமார், மற்றும் நிதீஷ் குமார் வர்மா ஆகிய 3 நண்பர்கள் 2021-ஆம் ஆண்டில் "தருவார் அக்ரோ" என்ற நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனத்தில் வாழைத்தண்டு கழிவிலிருந்து யோகா மேட் கூடை மற்றும் பைல் ஃபோல்டர் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
எம்பிஏ பட்டதாரிகளின் பிசினஸ் ஐடியா: டாக்ஸிலா பிசினஸ் ஸ்கூலில் இந்த மூன்று நண்பர்களும் சேர்ந்து பிஜிடிஎம் படித்து வந்தனர். அப்போது மூவருக்கும் நட்பு ஏற்பட்டது. ஜகத் கல்யாண் பீகாரின் ககாரியா மாவட்டத்தை சேர்ந்தவர். பெங்களூரில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு எம்பிஏ படித்தவர். தான்சானியா மற்றும் துபாயில் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் ஆகியவற்றில் பணிபுரிந்திருக்கிறார். இவருக்கு சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங்கில் நல்ல அனுபவம் உண்டு.

சத்யம் குமார் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர். எக்கனாமிக்ஸ் முடித்துவிட்டு எம்பிஏ முடித்திருந்தார். ஈக்கோஹாய் என்ற நிறுவனத்தின் பணிபுரிந்ததன் மூலம் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் அனுபவம் பெற்றிருந்தார்.
நிதிஷ் குமார் வர்மா, நாளந்தா மாவட்டத்தில் பி.காம் முடித்திருந்தார். இன்போசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியவர். இந்த மூவருமே கார்ப்பரேட் நிறுவனங்களில் நல்ல சம்பளத்திற்கு வேலையில் இருந்தாலும் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது ஏதாவது சுயமாக செய்ய வேண்டும் என்று யோசித்தனர். பீஹார் மாநிலத்தின் தேசிய மற்றும் சர்வதேச அளவில் முன்னிலைக்கு கொண்டு வருவதற்கு வெளிநாட்டு வேலைகளை தவிர்த்துவிட்டு சொந்த தொழில் செய்ய முன்வந்தனர்.
வாழைத்தண்டுகளை விற்பனை பொருளாக மாற்றியது எப்படி?: வாழைப்பழங்களை அறுவடை செய்த பிறகு வாழைத்தண்டுகள் வீணாவதை பார்த்த மூவருக்கும் ஒரு யோசனை வந்தது. அதையே ஏன் வணிகமாக மாற்றக்கூடாது என்று சிந்தித்தனர். அதற்காக வைஷாலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சீனியர் சயின்டிஸ்டிடம் ஆலோசனை பெற்றனர். அவர் வாழையிலிருந்து நாரை பிறித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.
அதன் பிறகு விவசாயிகளிடம் இருந்து வாழைத்தண்டுகளை சேகரித்து அதை இயந்திரங்களை பயன்படுத்தி பிரித்து எடுத்து, சுத்தப்படுத்தி, உலர்த்தி யோகா மேட், கூடை ஃபைல் போல்டர்கள் போன்றவற்றை தயார் செய்கின்றனர். மேலும் செயற்கையாக பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு பதிலாக இதையே பயன்படுத்தி ஆடைகள் செய்யலாமா என்ற ஆராய்ச்சியும் மேற்கொண்டு வருகின்றனர். நார் எடுத்தது போக மீதம் இருக்கும் வாழைத்தண்டுகளை பயன்படுத்தி மண்புழு உரம் மற்றும் விவசாயத்திற்கு தேவைப்படும் பிற ஊட்டச்சத்து திரவங்களை தயார் செய்கின்றனர். இதனால் யோகா மேட் போன்ற பொருட்களுக்கு அப்பால் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
ரூ.20 லட்சத்தில் தொடங்கிய தொழில்: தங்களுடைய நிறுவனத்திற்காக ஆரம்பத்தில் ரூ.20 லட்சம் முதலீடு செய்தனர். தொழில் தொடங்குபவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையைப் போலவே இவர்களுக்கும் சில சவால்கள் இருந்தது. நாரை பிரித்தெடுப்பது முதல் விவசாயிகளை கண்டறிவது வரை ஏகப்பட்ட பிரச்சனை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல எல்லாம் சரியானது. தற்போது இவர்களுடைய நிறுவனத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தங்களுடைய தயாரிப்புகளை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்கின்றனர், ஈ-காமர்ஸ் தளங்கள் மூலமாகவும் பொருட்கள் விற்பனையாகிறது. வாழைத்தண்டுக்கு அப்பால் மக்கானாவை களம் இறக்கி பத்துக்கும் மேற்பட்ட சுவைகளில் வறுத்த மக்கானாவை விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தண்டுகளை பயன்படுத்தி வேறு எந்தெந்த விஷயங்களை செய்ய முடியும் என்றும் சோதித்து வருகின்றனர். இப்போது இவர்களுடைய நிறுவனம் ரூ.2.5 கோடி வருமானம் ஈட்டும் சாம்ராஜ்யமாக மாறி நிற்கிறது.


Click it and Unblock the Notifications
