நம்முடைய அளவுக்கு மீறி வாங்கக்கூடிய கடன்கள் நம்மை மட்டுமல்ல நம் குடும்பத்தையே புரட்டி போடும் தன்மை கொண்டவை . இதனால் தான் கடன் வாங்குவதற்கு முன்பு நம்முடைய வருமானம் எவ்வளவு நம்மால் அதனை செலுத்தி விட முடியுமா என்பன உள்ளிட்டவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என முதலீட்டு ஆலோசகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
சில சமயங்களில் பெற்றோர் பெற்ற கடனை அடைக்க வேண்டிய பொறுப்பு பிள்ளைகளின் தலையில் வந்து விழுந்து விடுகிறது. அப்படி தன்னுடைய தந்தையின் 55 லட்சம் ரூபாய் கடனை 27 வயதிலேயே கட்டி முடித்ததாக ரெடிட் தளத்தில் ஒரு இளைஞர் வெளியிட்டு இருக்கும் பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. பலரும் இந்த இளைஞர் தங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக பதிவு செய்திருக்கின்றனர்.

ரெடிட் தளத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் எனக்கு 27 வயது ஆகிறது என் தந்தையின் 55 லட்சம் ரூபாய் கடனை நான் அடைத்திருக்கிறேன், என்னுடைய குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் இதுதான் என் வாழ்க்கைக்கான நோக்கமோ எனத் தோன்றுகிறது என குறிப்பிட்டு இருக்கிறார் . பலரும் எப்படி உன்னால் 27 வயதிலேயே இவ்வளவு பெரிய கடனை அடைக்க முடிந்தது, உன்னுடைய வருமானம் முழுவதுமே கடனை அடைப்பதற்கு சென்று விட்டதே என நீ எப்போதாவது வருத்தப்பட்டு இருக்கிறாயா? வாழ்க்கையின் நோக்கம் குறித்து நீ சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா என என்னிடம் கேள்வி எழுப்புகிறார்கள் என கூறியுள்ளார்.
என்னுடைய தந்தை 65 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி வைத்திருந்தார் , இதுவரை நான் அதில் 55 லட்சம் ரூபாய் கடனை திரும்ப செலுத்துவிட்டேன் மீதமுள்ள பணத்தையும் நான் விரைவில் செலுத்தி விடுவேன் என கூறும் அவர், சில சமயங்களில் இந்த வாழ்க்கையை நினைத்தால் கடுப்பாக தான் இருக்கும் என்கிறார். நம்முடைய வருமானம் முழுவதுமே கடனை அடைப்பதற்காகவே செல்கிறது நம்மால் வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை எனத் தோன்றும் பணத்தை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கவும் முடியாது, நினைத்த விஷயங்களுக்கு செலவு செய்யவும் முடியாது என கூறும் அவர், இவை அனைத்துமே வாழ்க்கை மீது தான் என்னுடைய பார்வையையே பெருமளவில் மாற்றி அமைத்து இருக்கிறது என கூறியிருக்கிறார்.
நம் வாழ்க்கையின் நோக்கம் என்பது படித்து முடித்து வேலைக்கு செல்ல வேண்டும், ஒரு கனவை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என அவசியம் இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன் என குறிப்பிடும் அந்த இளைஞர் இந்த கடன்களை திரும்ப செலுத்தியதால் என்னுடைய பெற்றோர் மன நிம்மதியோடு இருக்கிறார்கள் இந்த பொறுப்பை நான் பெருமையுடன் தான் பெற்றுக் கொள்கிறேன் என கூறியுள்லார். கடனை திரும்ப அடைக்கும் அனுபவம் நிதி ரீதியான ஒழுக்கத்தை தனக்கு கற்று தந்துள்ளது என தெரிவித்துள்ளார்.நான் திரும்ப செலுத்தக்கூடிய ஒவ்வொரு ரூபாய் கடனும் எனக்கு மகிழ்ச்சியையும் என் குடும்பத்திற்கு மன நிம்மதியையும் ஏற்படுத்தித் தருகிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.
ஒரு வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என யாரோ ஒருவர் நியமித்த கோட்பாடுகளுக்குள் நாம் பயணிக்க கூடாது எனக் கூறும் அவர் நமக்கு பிடித்தவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் கடின உழைப்பும் கூட நம் வாழ்க்கையின் நோக்கமாக இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார். இளம் வயதிலேயே இவ்வளவு பெரிய கடன் தொகையை அடைத்து இருக்கிறீர்கள் வாழ்க்கை குறித்த நல்ல புரிதலைக் கொண்டிருக்கிறீர்கள் என பலரும் அந்த இளைஞரை பாராட்டி வருகின்றனர்.
அனைவருக்கும் வாழ்க்கை என்பது ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை இளைஞரின் பதிவு உணர்த்துவதாக ஒரு நபர் தெரிவித்தார். ஒரு பயனர் இத்தனை இளம் வயதிலேயே இவ்வளவு பெரிய கடனை அடைத்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் உங்களுடைய எதிர்காலம் மிகவும் வளமையாக இருக்கும் என சுட்டிக்காட்டி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications