இன்றைய சூழலில் சுய தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பதற்காக வீட்டிலேயே தொழில் தொடங்கி அதை திறம்பட சிலர் நிர்வகித்து வருகின்றனர். அப்படி சிறிதாக தொடங்கிய ஒரு தொழிலை மாதம் ரூ.2 லட்சம் வருமானம் தரக்கூடிய தொழிலாக ஒருவர் மாற்றியுள்ளார். பிரதீபா ஜா என்ற பீகாரைச் சேர்ந்த பெண்மணி காளான் வளர்ப்பில் பிற ஊழியர்களை மிஞ்சும் அளவுக்கு வருமானம் பெற்று வருகிறார்.
பிரதீபா ஜா தனக்கு 15 வயதாக இருக்கும் போதே பீகார் அரசின் வேளாண் துறையில் பணியாற்றிய தனது தந்தையை இழந்தார். இதனால் 2000-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பை முடித்த பிரதீபா, தனது தாயின் உடல் நலக்குறைவு காரணமாக 16-வது வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று.

பீகாரின் தர்பாங்கா மாவட்டத்தில் மிர்சாபூர் ஹன்சி கிராமத்தில் தனது கணவருடன் வசித்து வந்தார். ஆணாதிக்க சமூகத்தில் இருந்ததால் வழக்கம் போல தலையை மூடிக்கொண்டு வீட்டு வேலைகளை செய்வதிலேயே பிரதீபா பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்.
அவருடைய கணவரின் வேலை ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டதும், பிரதீபாவும் சேர்ந்து அவருடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தனது மாமியாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மீண்டும் 2016-ஆம் ஆண்டில் பிரதீபா சொந்த கிராமத்திற்கே வந்தார்.
அந்த நேரத்தில் பீகாரில் வெற்றிகரமாக காளான் வளர்ப்பின் மூலம் நிறைய வருமானம் பெறும் ஒருவரின் கட்டுரையை நியூஸ் பேப்பரில் பார்த்துள்ளார். விவசாயத்துறையில் பணிபுரியும் போது தனது தந்தையின் மூலம் பிரதீபா பல்வேறு காளான் பண்ணைகளுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த நேரத்தில் தர்பாங்காவில் யாருக்கும் காளான்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லை. எனவே இதை தெரிந்து கொண்ட பிரதீபா காளான் வளர்ப்பில் ஈடுபட முடிவு செய்தார்.
காளான் வளர்ப்பில் ஈடுபடத் தனது கணவருடன் பிரதீபா கலந்துரையாடினார். அப்போது அவர் வசித்த கிராமத்தில் பெண்கள் வேலைக்கு வெளியே செல்ல அனுமதி இல்லை. பிரதீபாவை சுற்றியுள்ள அனைவரும் காளான் வளர்ப்பு குறித்த அவரின் யோசனையை எதிர்த்தனர். ஆனால் வீட்டு வேலைகளை தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆர்வமாக இருந்த பிரதீபா தன் கணவரின் ஆதரவுடன் காளான் வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கினார்.
இதனால் வேளாண் பல்கலைக் கழகத்தில் பயிற்சிக்காக சேர்ந்தார். 2016-ஆம் ஆண்டில் காளான் வளர்ப்பின் அடிப்படைகளை கற்றுக் கொண்டார். அதன் பிறகு தனது முதல் சாகுபடியைத் தொடங்கினார். உரம் தயாரித்தல், பட்டன் காளான்களை பயிரிடுவதற்கான அனைத்து வேலைகளையும் தெரிந்து கொண்டார்.
பயிற்சிக்குப் பிறகு பல்கலைக்கழகத்திலிருந்து 1 கிலோ காளான் விதைகளைப் பெற்றார். மீண்டும் 600 ரூபாய் முதலீடு செய்து உள்ளூர் விற்பனையாளரிடம் இருந்து 4 கிலோ விதைகளை வாங்கினார். 5 கிலோ விதைகளுடன் 50 பேக்குகளில் வீட்டில் ஒரு பகுதியில் வளர்க்க ஆரம்பித்தார். மேலும் இவற்றை வளர்ப்பதற்காக நெல், வைக்கோல் போன்றவற்றை வாங்க 400 ரூபாய் முதலீடு செய்தார். மொத்த முதலீடாக 1000 ரூபாய் செலவு செய்தார்.
பிரதீபா காளான் வளர்ப்புக்கு புதியவர் என்பதால் சிறு சிறு தவறுகளை ஆரம்ப காலத்தில் செய்துள்ளார். தன் வீட்டில் வளர்க்கப்பட்ட 30 கிலோ காளான்களை அறுவடை செய்து உள்ளூரில் விற்று 2,500 சம்பாதித்தார். 1500 என்ற முதல் லாபம் தன்னை மேலும் கற்றுக் கொள்ளவும், மேம்படுத்தவும் தூண்டியதாக பிரதீபா கூறியுள்ளார்.
தற்போது பிரதீபா காளான் விதைகளை தயாரிக்கிறார். சிற்பி, பட்டன் ஆகிய மூன்று வகையான காளான்களை பயிரிடுகிறார். மேலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் தயாரித்து வருகிறார். அதோடு பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறார். இதன் மூலம் அவருடைய மாத வருமானம் 2 லட்சம் ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications