வீட்டிலேயே தோட்டம் அமைத்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை சாகுபடி செய்து கொள்ளும் பலர் தற்போது உருவாகியுள்ளனர். இதன் மூலம் இயற்கையை ரசிக்கவும், இயற்கையுடன் இணைந்து இருக்கவும், அமைதியையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கவும் முடியும். மாடித் தோட்டம் வெறும் மகிழ்ச்சிக்காக மட்டுமின்றி ஒரு லாபகரமான தொழிலாகவும் மாறும் என்பதை கேரளாவின் பாலக்காடைச் சேர்ந்த சபீரா முகமது மூஸா என்ற பெண்மணி நிரூபித்துள்ளார். வீட்டிலேயே தோட்டம் அமைத்து அதன் மூலம் மாதத்திற்கு 4 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறார். இவருடைய சுவாரஸ்யக் கதை குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
சுமார் 7 வருடங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) இருந்துவிட்டு கேரளாவில் உள்ள பாலக்காடிற்கு திரும்பியவர் தான் சபீரா முகமது மூஸா. இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவரும் குழந்தைகளும் அலுவலகம் மற்றும் பள்ளிக்கு சென்று விடுவார்கள். அதன் பிறகு சபீராவுக்கு நிறைய ஓய்வு நேரம் இருந்துள்ளது. இதனால் அவற்றை எவ்வாறு கழிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த சபீராவுக்கு மொட்டை மாடியில் தோட்டம் அமைக்க யோசனை தோன்றியுள்ளது.

முதன்முதலாக சபீரா 1998-ஆம் ஆண்டு மல்லிகை மற்றும் அந்துரியம் போன்ற பூக்களுடன் தனது தோட்டக்கலை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு இந்தியா முழுவதிலும் உள்ள பூச்செடிகள், மரக்கன்றுகள், விதைகளை வாங்க நர்சரிகளுக்கு சென்றுள்ளார். இதற்காக கிரிஷி பவன், பாலக்காடு மற்றும் பிற இடங்களில் இருந்து மரக்கன்றுகளை சேகரித்து தனது மொட்டை மாடியில் விதைத்துள்ளார், அதன் பின் பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்க தொடங்கின.
2006-ஆம் ஆண்டில், சபீராவின் ஆர்க்கிட் சாகுபடி உயரிய அங்கீகாரத்தைப் பெற்றது. அவர் தோட்டக்கலையின் பணிக்காக கேரள மாநில அரசின் "உத்யானா ஸ்ரேஸ்தா புரஸ்கார்" என்ற விருதைப் பெற்றார். அதன் பின் அவரது தோட்டம் மாநிலம் முழுவதும் இருந்து பார்வையாளர்களை ஈர்த்தது.
அவரது கணவர் முகமது மூசா, தாய்லாந்தில் இருந்து ஆர்க்கிட்களை இறக்குமதி செய்ய பெரிதும் உதவினார். உலகின் மிகப்பெரிய ஆர்க்கிட் ஏற்றுமதியாளரான தாய்லாந்தில் சுமார் 1,300 வகை பூக்கள் உள்ளன. 2022-ஆம் ஆண்டில் மட்டும் , தாய்லாந்தின் ஆர்க்கிட் ஏற்றுமதி 74.9 மில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டது.
அதன் பின் தனது மொட்டை மாடியில் பூக்கள் பூத்துக் குலுங்க தொடங்கியதால் இடம் முழுவதுமாக நிரம்பியது. இதனால் சமீரா ஒரு பெரிய இடத்திற்கு தனது தோட்டத்தை மாற்றினார். அதன் பின் சீனா, தைவான் மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த பூக்களையும் தனது நர்சரியில் வைக்க ஆரம்பித்தார். பிறகு சபீரா படிப்படியாக பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் தனது இரண்டாவது நர்சரி கார்டனை தொடங்கினார்.
இன்று, சபீரா தனது இரண்டு நர்சரிகளில் டென்ட்ரோபியம், கேட்லியாஸ், வாண்டாஸ், ஒன்சிடியம்ஸ், பாபியோபெடிலம்ஸ், புல்போபில்லம் மற்றும் ஃபாலெனோப்சிஸ் உள்ளிட்ட 600 வகையான மல்லிகைகளை வளர்த்து வருகிறார்.
மல்லிகைகளுக்கான உலகளாவிய சந்தை அளவு 2023-ஆம் ஆண்டில் 751.9 மில்லியன் டாலர்களில் இருந்து 2032-ஆம் ஆண்டளவில் 1,176.62 மில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று சியோன் சந்தை ஆராய்ச்சி கூறுகிறது. மருந்துகளில் ஆர்க்கிட்களின் பயன்பாடு அதிகரித்து வருவது மற்றும் அலங்கார நோக்கங்களுக்காக அதிகரித்து வரும் காரணங்கள் இவற்றின் தேவையை அதிகரிக்கச் செய்கின்றன. ஆர்க்கிட்கள் மற்றும் சில அலங்கார செடிகள் இந்தியா முழுவதும் கூரியர் மூலம் விற்கப்படுகின்றன.
"ஒவ்வொரு மாதமும், நாங்கள் 5,000 முதல் 7,000 செடிகளை விற்பனை செய்கிறோம், இதன் விளைவாக 4 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது," என்று சபீரா கூறியுள்ளார்.
திருமணமான பிறகு எதையுமே சாதிக்க முடியாது என்று நினைக்கும் இல்லதரசிகளுக்கு சபீராவின் கதை சிறந்த உதாரணம்.


Click it and Unblock the Notifications