ஓய்வு காலத்திற்காக நாம் பாதுகாப்பாக சேமிக்க மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆனால், பலர் இந்த திட்டத்தில் பணத்தை போட்டுவிட்டு, அதன் பின்னர் அதை கவனிப்பதே இல்லை. நிதி ஆலோசகர்கள் கூறுவது என்னவென்றால், உங்கள் முதலீட்டு தொகையை மாற்றாமலேயே, அந்தப் பணம் எதில் முதலீடு செய்யப்படுகிறது என்ற விகிதத்தை (சொத்து ஒதுக்கீடு) மட்டும் மாற்றுவதன் மூலம், ஓய்வு பெறும் வயதில் நீங்கள் கூடுதலாக ரூ.22 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும். அதாவது, அதிகப் பணம் போடத் தேவையில்லை புத்திசாலித்தனமாக முதலீட்டு பிரிவுகளை மாற்றினாலே போதும்.
NPS என்றால் என்ன..?: NPS திட்டம் என்பது அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற ஓய்வூதியத் திட்டமாகும். நாம் மாதம் மாதம் போடும் பணம், ஓய்வுக் காலத்திற்குப் பிறகு நமக்குத் தொடர்ச்சியான வருமானமாக கிடைக்க உதவும்.

இது எப்படி வேலை செய்கிறது..?: நீங்கள் NPS-இல் போடும் பணம் முழுவதும் ஒரே இடத்தில் இருக்காது. அது பங்குச் சந்தை (Equity), அரசுப் பத்திரங்கள் (Govt. Bonds) மற்றும் தனியார் நிறுவனப் பத்திரங்கள் என பல பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. எந்தப் பிரிவில் எவ்வளவு பணம் போட வேண்டும் என்பதை முதலீட்டாளர் முடிவு செய்யலாம். இதற்குப் பெயர்தான் சொத்து ஒதுக்கீடு ஆகும்.
வயதிற்கு ஏற்ப மாற்ற வேண்டிய முக்கிய உத்தி : இந்த திட்டத்தில் பெரிய லாபம் பார்க்க ஒரு எளிய சூத்திரம் உள்ளது. உங்களுக்கு வயதாக ஆக, நீங்கள் பங்குகளில் போடும் பணத்தின் அளவு குறைய வேண்டும். ஆனால், உங்கள் ஒட்டுமொத்த லாபம் குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
25 - 35 வயது வரை : இளமைப் பருவத்தில் ரிஸ்க் எடுக்கும் திறன் அதிகம். அப்போது பங்குச் சந்தையில் அதிக வருமானம் ஈட்ட முடியும். எனவே, உங்கள் பணத்தில் 75% வரை பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். அதிக லாபம் ஈட்ட இது உதவியாக இருக்கும்.
56 - 60 வயது வரை : ஓய்வு பெறும் வயது நெருங்கும்போது, சந்தை இறங்கினால் நிதி குறையக் கூடாது. எனவே, பணத்தை பாதுகாப்பான அரசுப் பத்திரங்கள் மற்றும் பெருநிறுவனப் பத்திரங்களுக்கு மாற்ற வேண்டும். இந்த வயதில், பங்குகளில் 25% மட்டும் இருப்பது நல்லது.
லாபம் எவ்வளவு கிடைக்கும்..?: இந்த உத்தியைப் பின்பற்றுவதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை ஒரு உதாரணத்துடன் பார்க்கலாம். 35 வயதான ஒருவர் மாதம் ரூ.10,000 முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, சாதாரணமாக 8% வரை லாபம் கிடைக்கும். அதாவது. ஓய்வு காலத்தில் அவருக்கு ரூ.82 லட்சம் கிடைக்கும்.
மாறும் ஒதுக்கீடு மூலம் 9% லாபம் கிடைக்கும். அதாவது, ஓய்வு காலத்தில் அவருக்கு ரூ.1.04 கோடி கிடைக்கும். சரியான நேரத்தில் சொத்து ஒதுக்கீட்டை மாற்றுவது மூலம், கூடுதல் முதலீடே இல்லாமல் ரூ.22 லட்சம் அதிகமாக சம்பாதிக்க முடியும். எனவே, உங்கள் NPS கணக்கை திறந்துவிட்டு மறந்துவிடாமல், அவ்வப்போது வயதிற்கு ஏற்ப பிரிவுகளை மாற்றுவதே புத்திசாலித்தனமான அணுகுமுறை ஆகும்.


Click it and Unblock the Notifications