குஜராத்: 2008ஆம் ஆண்டு டாடா குழுமம் தன்னுடைய டாடா நானோ கார் உற்பத்தி ஆலையை மேற்குவங்க மாநிலத்திலிருந்து குஜராத்திற்கு இடமாற்றம் செய்தது. இதற்கு ஒரு எஸ்எம்எஸ் தான் காரணம் என தெரிய வந்துள்ளது.
2006 ஆம் ஆண்டில் டாடா நிறுவனம் தங்களுடைய கனவு கார் திட்டமான நானோ கார்களை மேற்கு வங்க மாநிலத்தில் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக கொல்கத்தாவில் நானோ கார் உற்பத்தி ஆலை நிறுவப்படும் எனக் கூறியது. ஆனால் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் போராட்டங்களும் அதனை தொடர்ந்து வன்முறைகளும் வெடித்தன.

இதனால் மனமுடைந்து போன ரத்தன் டாட்டா மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து நானோ கார் உற்பத்தி ஆலை திட்டத்தை கைவிடுவதாக முடிவு எடுத்தார். ஆனால் இந்த ஆலையை எந்த மாநிலத்தில் நிறுவுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார். அந்த சமயத்தில் தான் ரத்தன் டாட்டாவிற்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது.
குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி welcome என்ற ஒரே வார்த்தையை அந்த எஸ்எம்எஸ்-இல் அனுப்பி இருந்தார். இதனை தொடர்ந்து தான் மேற்குவங்கத்திலிருந்து நானோ கார் உற்பத்தி ஆலை குஜராத் மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.
மேற்குவங்கத்தில் நிகழ்ந்த தொடர் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரத்தன் டாடா , நானோ கார் உற்பத்தி ஆலையை மேற்குவங்கத்தில் நிறுவும் திட்டத்தை கைவிடுகிறோம் என தெரிவித்தார். அதனை நேரலையில் பார்த்து கொண்டிருந்த குஜராத் மாநில முதலமைச்சர் மோடி, welcome என்ற எஸ் எம் எஸ் ஒன்றை அனுப்பினார். உடனடியாக இதனை ஏற்ற ரத்தன் டாடா அடுத்த சில தினங்களிலேயே நானோ கார் ஆலை குஜராத்திற்கு மாற்றப்படும் என அறிவித்தார்.
இதனை அடுத்து குஜராத் மாநிலம் சனாந்த் பகுதியில் 2010 ஆம் ஆண்டு நானோ கார் ஆலை நிறுவப்பட்டது. 2000 கோடி மதிப்பீட்டில் இந்த ஆலை நிறுவப்பட்டு நானோ கார்கள் தயாரிக்கப்பட்டன. இந்த ஆலையின் தொடக்க விழாவில் பேசிய குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி 1 ரூபாய் செலவிட்டு நான் அனுப்பிய ஒரு எஸ் எம் எஸ் நமது மாநிலத்திற்கு இவ்வளவு பெரிய முதலீட்டினை கொண்டு வந்திருக்கிறது என தெரிவித்தார்.
பின்னர் டாடா நிறுவனம் வெற்றிகரமாக இங்கே ஆலையை நிறுவி நானோ கார்களை தயாரித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு நானோ கார் திட்டம் டாடாவுக்கு வெற்றியை தரவில்லை. 2018ஆம் ஆண்டில் அந்த கார் உற்பத்தியையே நிறுவிவிட்டது.


Click it and Unblock the Notifications