ஒரு வீட்டை வாங்குவது என்பது பலருக்கும் இருக்கும் கனவு. இந்தக் கனவை நினைவாக்க பட்ஜெட் இல்லாதவர்கள் வீட்டுக் கடன்களை நம்பியே இருக்கின்றனர். இந்தியாவில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? என்பது பலருக்கும் தெரியாது. இந்த கணக்கீடுகளை தெரிந்து கொள்வது திறம்பட உங்கள் கடனை நிர்வகிக்க உதவும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை கணக்கிடுவதற்கு பயன்படுத்தும் பொதுவான முறைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
வங்கிகள் பொதுவாக 3 முறையைப் பயன்படுத்தி வீட்டு கடன்களுக்கான வட்டியை நிர்ணயிக்கின்றன. அவை மன்த்லி ரெடியூசிங் பேலன்ஸ், இயர்லி ரெடியூசிங் பேலன்ஸ், டெய்லி ரெடியூசிங் பேலன்ஸ். இந்த 3 முறைகளும் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

இயர்லி ரெடியூசிங் பேலன்ஸ் (yearly reducing balance): இயர்லி ரெடியூசிங் பேலன்ஸ் என்று சொல்லப்படும் வருடாந்திர வட்டி முறையில் உங்கள் வீட்டுக் கடன்களுக்கான வட்டி 1 வருடத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக நீங்கள் 8 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.30 லட்சம் லோனை எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும். அப்படியானால் முதல் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை EMI-யாக செலுத்துவீர்கள். இடையில் சிறிது பணம் சேர்ந்து ரூ.1 லட்சத்தை வரவு வைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மீதமுள்ள 29 லட்சத்திற்கான வட்டி ஒரு வருடத்திற்கு பின்னரே கணக்கிடப்படும். அதுவரை நீங்கள் ரூ.30 லட்சத்திற்கான வட்டியை தான் செலுத்த வேண்டும்.
மன்த்லி ரெடியூசிங் பேலன்ஸ் (monthly reducing balance): மன்த்லி ரெடியூசிங் பேலன்ஸ் என்று சொல்லப்படுகிற இந்த முறையில் நீங்கள் வட்டியும் அசலுமாக ஒரு மாதம் EMI செலுத்துகிறீர்கள். மேலே கூறப்பட்டுள்ள அதே உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நீங்கள் 30 லட்சம் ரூபாயை கடன் பெற்று இருக்கிறீர்கள். முதல் மாதத்திலேயே ரூ.1 லட்ச ரூபாயை வரவு வைக்கிறீர்கள். அப்படியானால் மறு மாதம் மீதமுள்ள ரூ. 29 லட்சத்திற்கான வட்டி கணக்கிடப்பட்டு உங்களிடம் வசூலிக்கப்படும்.
டெய்லி ரெடியூசிங் மெத்தட் (daily reducing balance): இந்த முறையில் வட்டி ஒவ்வொரு நாளின் அடிப்படையிலும் கணக்கிடப்படும்/ உதாரணமாக நீங்கள் ரூ.30 லட்சம் கடன் பெற்று ரூ.1 லட்சத்தை திருப்பி செலுத்துகிறீர்கள். நிலுவைத் தொகையாக மீதம் ரூ.29 லட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் மறுநாள் முதல் ரூ.29 லட்சத்திற்கான வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். இந்த முறையில் உங்கள் வட்டி சுமை குறைவாகவே இருக்கும்.
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம்: வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் பொதுவாக பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம்.
கடன் தொகை: உங்களுடைய கடன் தொகைக்கு ஏற்ப வட்டி விகிதங்கள் மாறுபடலாம். அதேபோல நீண்ட கடன் காலம் இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த வட்டி செலவும் அதிகரிக்கும்.
கிரெடிட் ஸ்கோர்: அதிக கிரெடிட் ஸ்கோர் கொண்ட கடன் பெறுபவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகள் கடன் தரும். ஏனெனில் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பவர்களை வங்கிகள் நல்ல நிதி நடத்தை உடையவர்களாக பார்க்கும்.
வட்டி விகித முறை: வங்கிகள் பொதுவாக பிக்சட் வட்டி விகிதங்கள் அல்லது ஃப்லோட்டிங் வட்டி விகிதங்களில் கடன்களை வழங்கும். பிக்சட் வட்டி விகிதம் என்பது ஒட்டுமொத்த கடன் காலத்திற்கும் மாறவே மாறாது. ஒரே சதவீத வட்டி விகிதத்தில் உங்களிடமிருந்து வசூலிக்கப்படும். அதுவே பிளோட்டிங் வட்டி விகிதங்களில் வங்கிகள் சந்தை நிலமைகளுக்கு ஏற்ப தங்களின் வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும்.
மேலே கூறப்பட்டுள்ள பல்வேறு விஷயங்களை பொறுத்து தான் உங்களுடைய வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதை தெரிந்து கொண்டு வங்கிகளை அணுகும் பட்சத்தில் தகவல் அறிந்து லோன் பெற முடியும்.


Click it and Unblock the Notifications