சென்னை: 2024 ஆம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சாதகமான ஆண்டாக அமைந்தது. இந்தியாவில் தொலைதொடர்பு துறையில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
கடந்த ஜூலை மாதத்தில் ஜியோ , ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணங்களை 15 சதவீதம் வரை உயர்த்தின. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் பலரும் அரசு தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு மாற தொடங்கினர்.

அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சுமார் 55 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல்-க்கூ மாறியவர்கள்.
இவ்வாறு தங்கள் நிறுவனத்தை நோக்கி வந்த வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளும் எடுத்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க்கை பிஎஸ்என்எல் நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் ஒரு லட்சம் 4ஜி டவர்களை நிறுவுவது என இலக்க நிர்ணயம் செய்தது. தற்போது வரை சுமார் 62,000 4ஜி நெட்வொர்க் டவர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுவியது.
4ஜி சேவையை ஒரு பக்கம் விரிவாக்கம் செய்து வரக்கூடிய அதே வேளையில் பிஎஸ்என்எல் நிறுவனம் 5g சேவையை வழங்குவதற்கான பணிகளையும் தீவிர படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவைகளை வழங்க தொடங்கி விட்டன. இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் குறிப்பிட்ட சில நகரங்களில் தற்போது சோதனை ஓட்டமாக 5ஜி சேவையை வழங்கி வருகிறது.
கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில் இருக்கும் மக்களும் தொலைதொடர்பு சேவையை பெறக்கூடிய வகையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் அடிப்படையிலான சேவையை அறிமுகம் செய்ய பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.
இதற்கான சோதனை ஓட்டங்களும் நடைபெற்றன. இதன்படி மொபைல் கனெக்டிவிட்டி கிடைக்காத பகுதிகளில் சேட்டிலைட் கனெக்சன் வாயிலாக தகவல் தொடர்பு மேற்கொள்ளக்கூடிய வசதியை பரிசோதனை செய்து வருகிறது .
தனியார் நிறுவனங்களுக்கு நிகராக இன்டர்நெட் அடிப்படையிலான ஃபைபர் டிவி சேவையை கொண்டு வந்திருக்கிறது. முதல் கட்டமாக புதுச்சேரியில் இந்த சேவைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இலவசமாக சுமார் 300க்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரலையிலும், திரைப்படங்கள், ஆவண படங்கள் ஆகியவற்றை காண முடியும்.
இது மட்டும் இன்றி பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் வைஃபை ஹாட்ஸ்பாட் ரோமிங் என்ற புதிய வசதியும் கொண்டு வந்திருக்கிறது. இதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம் ஆங்காங்கே தங்களுடைய ஃபைபர் நெட்வொர்க் வாயிலாக ஹாட்ஸ்பாட்டுகளை நிறுவி இருக்கிறது.
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் எந்த பகுதிக்கு சென்றாலும் இந்த ஹாட்ஸ்பாட்டுகளில் நேரடியாக கனெக்ட் செய்து கொண்டு இன்டர்நெட் சேவையை பெற முடியும். வரும் 2025ஆம் ஆண்டிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி பல சேவைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications