பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மற்றும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) ஆகியவற்றின் கீழ் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்.
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) அறிமுகம் செய்து ஆகஸ்ட் 28, 2023 உடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்தது. பிரதமர் நரேந்திர மோடியால் 2014 இல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் கடன், ஓய்வூதியம், வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான்.

சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கும் குறிப்பாக நலிவடைந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு சேமிப்பு, வைப்புத் தொகை மற்றும் காப்பீடு அளிக்கும் விதத்தில் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியபடி, PMJDY திட்டத்தின் கீழ் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் ஜன்தன் கணக்குகளை வைத்திருப்பதன் மூலம் முறையான வங்கி முறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்தக் கணக்குகளில், சுமார் 55.5 சதவீதம் பெண்களுக்கு சொந்தமானது. 67 சதவீதம் கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மொத்த வைப்புத்தொகை ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்றார். மேலும் 34 கோடி ரூபே கார்டுகள் இந்த அக்கவுன்ட்தாரர்களுக்கு கட்டணம் எதுவுமின்றி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2 லட்சத்துக்கான விபத்து காப்பீடு பலனும் உள்ளது.
PMJDY திட்டப் பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்துக்கான விபத்து காப்பீடும் ரூ.30,000க்கான லைப் இன்ஸ்சூரன்ஸ் பலனும் உள்ளது. 2014 ஆகஸ்ட் 15 முதல் 2015 ஜனவரி 31 ஆம் தேதி வரை தொடங்கப்பட்ட அனைத்து ஜன் தன் அக்கவுன்ட்களுக்கும் இந்த இன்சூரன்ஸ் திட்டம் பொருந்தும்.
இந்தப் பலன்கள் நீட்டிக்கப்பட்டு இப்போது ரூபே கார்டுகளுக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சம் வரை அளிக்கப்படுகிறது. இது 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 க்குப் பின் தொடங்கப்படும் கணக்குகளுக்குப் பொருந்தும்.
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தில் இன்சூரன்ஸ் பெற விரும்புவோர் குடும்பத்தலைவராகவோ அல்லது குடும்பத்தில் சம்பாதிப்பவராகவோ இருக்க வேண்டும். அவர் 18-59 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
ஒருவேளை சம்பாதிக்கும் நபரின் வயது 60க்கு மேலிருந்தால் அதற்கு அடுத்து இரண்டாவது நபர் PMJDY திட்டத்துக்கு தகுதியுடையவர் ஆவார்.
திட்டத்தில் இணைந்தவர் வங்கியின் ரூபே கார்டு மற்றும் கேஒய்சி அளித்தவராக இருக்க வேண்டும்.
அனைத்து தகுதியான PMJDY கணக்கு வைத்திருப்பவர்களும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) ஆகியவற்றின் கீழ் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்.


Click it and Unblock the Notifications