சென்னை: இந்தியாவின் ஜிடிபி பங்களிப்பில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு பொருத்தவரை பல ஆண்டுகளாகவே வாகன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஒரு மாநிலமாக தொடர்ந்து தன்னை நிலை நிறுத்தி வருகிறது. உலகில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளும் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டு இருப்பதே இதற்கு முக்கியமான காரணமாகும்.
கார் உற்பத்தி மையம்: இந்தியாவில் உற்பத்தி செய்யப்படக்கூடிய 50 சதவீத கார்கள் தமிழ்நாட்டில் இருந்து தான் பிறக்கின்றன என Finshots தளம் வெளியிட்டுள்ள ஒரு தரவு தெரிவிக்கிறது. இவ்வாறு தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்களில் பெரும்பாலானவை சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நிறுவப்பட்டிருக்கும் ஆலைகளில் தான் உற்பத்தி ஆகின்றன.

ஏன் தமிழ்நாடு முன்னிலை: தமிழ்நாடு அரசை பொறுத்தவரை காலம் காலமாகவே தொழில்துறைக்கு சாதகமான கொள்கைகளை பின்பற்றி வருகிறது. அது மட்டும் இல்லை தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளை நிறுவக்கூடிய நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது . மூலதன மானியம் ,மாநில ஜிஎஸ்டியில் சலுகை, மின்சார வரியில் இருந்து விலக்கு என பல்வேறு சலுகைகளை கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு பிரத்தியேகமாக வழங்குகிறது . இதன் விளைவாக தான் சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தன்னுடைய கார் உற்பத்தி நிறுவனங்களை அமைத்திருக்கின்றன.
என்னென்ன கார் நிறுவனங்கள் உள்ளன?: 1984 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்துஸ்தான் மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் தன்னுடைய கார் உற்பத்தி ஆலையை சென்னையில் நிறுவியது. தற்போது இந்த ஆலை செயல்பாட்டில் இல்லை . 1993இல் மிட்சுபிசி மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய உற்பத்தி ஆலையை சென்னையில் அமைத்தது. 1995ஆம் ஆண்டில் ஃபோர்டு நிறுவனமும் 1996 ஆம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனமும் தங்களுடைய கார் உற்பத்தி ஆலையை சென்னையில் நிறுவின. 2007 ஆம் ஆண்டில் பிஎம்டபிள்யூ நிறுவனம் சென்னையில் தன்னுடைய முதல் ஆலையை அமைத்தது.

சென்னை ஏன் விருப்பமான இடம்: 2010 ஆம் ஆண்டு ரெனால்ட் நிசான் நிறுவனமும் 2012 ஆம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சென்னையில் தங்களுடைய முதல் கார் உற்பத்தி ஆலைகளை நிறுவின. 2019 ஆம் ஆண்டு சிட்ரியான் நிறுவனமும், 2024ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் சென்னையில் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை அமைத்தன. சென்னை விமான நிலையம், துறைமுகம் மற்றும் பிற மாநிலங்களுடன் சாலை இணைப்பு என சிறந்த போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது. கார் உற்பத்தி ஏற்றுமதிக்கு சிறந்த நகரமாக சென்னை திகழ்கிறது.
உதிரி பாக விநியோகம்: இதுமட்டுமல்ல சென்னை கார் உற்பத்திக்கு தேவையான மற்ற உதிரி பாகங்களும் எளிமையாக கிடைக்கும் ஒரு நகரமாக இருப்பதே பல்வேறு நிறுவனங்களும் முன்வந்து இங்கே தங்களுடைய உற்பத்தி ஆலைகளை அமைக்க முக்கிய காரணம். சிறு, குறு நிறுவனங்களில் தொடங்கி சென்னையில் 4000க்கும் அதிகமான வாகன உதிரிபாக சப்ளை செய்யும் நிறுவனங்கள் செயல்படுகின்றன .
சென்னை தான் கெத்து: ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களில் 50 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை. அதே போல மொத்த சரக்கு வாகனங்களில் 33 சதவீத சரக்கு வாகனங்கள் சென்னையில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன, பயணிகள் வாகனங்களில் 21% வாகனங்கள் சென்னையில் தான் தயாரிக்கப்படுகின்றன . வாகன உதிரி பாகங்களை பொருத்தவரை 35 சதவீத பாகங்களை தமிழ்நாடு தான் உற்பத்தி செய்து மற்ற பகுதிகளுக்கு வழங்குகிறது . மின்சார வாகன உற்பத்தியிலும் சென்னையின் பங்கு 35 சதவீதமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications