பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காஷ்மீரின் பொருளாதாரத்தையே நிலைகுலைய செய்துள்ளது. சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டு தொழில்களை மேற்கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
கடந்த 22ஆம் தேதி காஷ்மீரில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அச்சம் காரணமாக ஏற்கனவே அங்கே சுற்றுலா வந்திருந்தவர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கே திரும்பிவிட்டனர். காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என பதிவு செய்திருந்தவர்கள் அனைவரும் தங்களுடைய பயண திட்டத்தை ரத்து செய்துவிட்டார்கள்.

இதன் காரணமாக ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தரக்கூடிய இந்த மே மாதத்தில் காஷ்மீர் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. கிட்டதட்ட பத்து லட்சம் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், காஷ்மீரின் சுற்றுலாத்துறை ஆயிரம் கோடி ரூபாய் வரை இழந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருபுறம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் அச்சமடைந்திருக்கும் காஷ்மீர் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு ,தங்களுடைய தொழில்கள் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி தவிப்பதாக தெரிவிக்கின்றனர். பயங்கரவாதிகள் நடத்திய ஒரே ஒரு தாக்குதல் காஷ்மீரின் ஒட்டுமொத்த சுற்றுலா துறையையும் பாதித்திருக்கிறது.
பாதுகாப்பான ஒரு சுற்றுலா தளம் என்ற ஒரு நம்பகத்தன்மை இழக்கப்பட்டுள்ளது. குல்மார்க் பகுதியில் கிட்டத்தட்ட 1150 தங்கம் அறைகள் இருக்கும் நிலையில் அதில் 50 அறைகள் மட்டுமே தற்போது பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து 48 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு கிட்டத்தட்ட 10 லட்சம் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே நாளில் காஷ்மீர் தன் ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை இழந்திருக்கிறது. அனந்த்நாக், பாரமுல்லா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா துறையை அடிப்படையாகக் கொண்டு தொழில் செய்து வந்தவர்கள் எல்லாம் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். காஷ்மீரில் பல்வேறு முதலீடு திட்டங்களும் நிறுத்தி வைக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக வளைகுடா நாட்டை சேர்ந்த நிறுவனம் தன்னுடைய மிகப்பெரிய மாலினை காஷ்மீரில் 500 கோடி முதலீட்டில் நிறுவுவதாக இருந்தது. தற்போது அது தொடருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் தொழில் துறையை மேம்படுத்துவதற்காக புதிய தொழில் கொள்கை கொண்டுவரப்பட்டு அதன் மூலம் 1.69 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை அனைத்தும் தற்போது நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications