நான் அனைவரும் நம் அன்றாட வாழ்வில் பல்வேறு செயல்களுக்காக வங்கிச் சேவைகளை பயன்படுத்துகிறோம். இந்தியாவை பொறுத்தவரை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன.
அந்த வகையில் வங்கி செயல்பாடுகளை ஒழுங்கமைக்கும் அமைப்பாக ரிசர்வ் வங்கி இருக்கிறது. பொதுத்துறை, தனியார் வங்கிகள் என பல்வேறு வங்கிகள் இந்தியாவில் செயல்படுகின்றன. இவற்றுக்கு எங்கிருந்து வருமானம் வருகிறது என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

வட்டி: இந்தியாவில் வங்கிகளை பொறுத்த வரை பல்வேறு வழிகளில் வருவாய் ஈட்டுகின்றன. வங்கிகளுக்கு கணிசமான வருவாய் கடன்களுக்கான வட்டிகளில் இருந்து கிடைக்கிறது. அதாவது வங்கிகளின் முக்கியமான வருவாய் ஆதாரமாக இருப்பது நமக்கு வழங்கும் கடன்களுக்காக பெற்றுக்கொள்ளும் வட்டி தான்.
தனிநபர் கடன்கள், வீட்டுக் கடன்கள், வாகன கடன்கள், வணிக கடன்கள் என ஒவ்வொரு வகையான கடன்களுக்கும் ஒவ்வொரு விதமாக வட்டி விகிதங்களை நிர்ணயிக்கின்றன. இந்த வட்டிகள் வங்கிகளின் மிகப்பெரிய வருவாய் ஆதாரங்களாக உள்ளன.
முதலீடு: வங்கிகள் பல்வேறு துறைகளில் முதலீடு செய்து அதன் மூலமும் வருவாய் ஈட்டுகின்றன. குறிப்பாக அரசு பத்திரங்கள், பங்குச்சந்தைகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலமும் வங்கிகள் கணிசமான தொகையை வருவாயாக பெறுகின்றன.
கட்டணங்கள்: பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவை கட்டணங்களை வசூலிக்கின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்மிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணங்கள் வங்கிகளுக்கு குறிப்பிட்ட அளவு வருவாயை தருகின்றன.
குறிப்பாக நமது கணக்கை பராமரிப்பதற்கான கட்டணம், ஏடிஎம் பயன்பாட்டுக்கான கட்டணம், பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், கடன் பெறுவதற்கான ப்ராசசிங் கட்டணங்கள், ஆவண கட்டணங்கள் என வங்கிகள் பல்வேறு கட்டணங்கள் மூலமும் அபராதங்கள் மூலமும் வருவானம் பெறுகின்றன.
கிரெடிட் கார்டு: அண்மை காலமாக வங்கிகளின் முக்கிய வருவாய் ஆதாரங்களாக கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன. கிரெடிட் கார்டுக்கான பயன்பாட்டு கட்டணம், ஆண்டுக் கட்டணம், வட்டி, வியாபாரிகளுக்கான கட்டணம் என பல்வேறு வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
வெளிநாட்டு கரன்சிகள்: வெளிநாட்டு கரன்சிகளை இந்திய ரூபாய்க்கும், இந்திய ரூபாயை வெளிநாட்டு கரன்சிகளுக்கும் மாற்றும் வேலையிலும் வங்கிகள் ஈடுபடுகின்றன. இத்தகைய கரன்சி கன்வர்ஷனில் குறிப்பிட்ட அளவு தொகையை வங்கிகள் கமிஷனாக பெற்றுக் கொள்கின்றன.
வங்கிகளுக்கு இடையிலான கடன்: வங்கிகள் தனிநபர்கள், தொழில்கள் மட்டுமல்லாது, வங்கிகளுக்கும் கடன்களை வழங்குகின்றன. இப்படி வழங்கப்படும் கடன்களுக்கு வசூலிக்கப்படும் வட்டிகளும் வங்கிகளின் வருமானமாகின்றன.
டிஜிட்டல் பேங்கிங்: அண்மைக்காலமாக இந்தியாவில் டிஜிட்டல் பேங்கிங் என்பது வளர்ந்து வருகிறது. இதில் குறிப்பாக ஃபின்டெக் நிறுவனங்களோடு கூட்டமைத்துக் கொள்வதன் மூலம் வங்கிகள் கணிசமான தொகையை வருவாயாக பெறுகின்றன.
நாம் பல்வேறு ஈ காமர்ஸ் தளங்களில் கூட காண்கிறோம், குறிப்பிட்ட வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தினால் சலுகை என்பது இடம்பெற்றிருக்கும். இது கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளின் முக்கிய வருவாய் மூலங்களாக மாறியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications