இந்தியா மட்டுமல்ல உலகளவில் அனைத்து வங்கிகளும் வட்டி மூலம் தான் அதிகப்படியான லாபம் ஈட்டுகின்றன என்பதை அறிவோம். ஆனால் இஸ்லாமிக் வங்கிகள் வட்டி முறையை முற்றிலும் தவிர்த்து இயங்க கூடியவை என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
இஸ்லாமிக் வங்கிகள், ஷரியா சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. இஸ்லாம், பொருளாதார நடவடிக்கைகளில் நியாயம், நீதி மற்றும் சமத்துவம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இதனால் பண பரிவர்த்தனையில் வட்டியை நியாயமற்றதாக இஸ்லாம் மதம் கருதுகிறது.

இஸ்லாமிக் வங்கிகளில் ஏன் வட்டி இல்லை?
இஸ்லாமிய மதக் கொள்கைகளின்படி, பணம் என்பது ஒரு மீடியம் மட்டுமே. அதை வைத்து நேரடியாக லாபம் ஈட்டுவது தவறு என்று கருதப்படுகிறது. அதற்கு பதிலாக, பொருட்கள் மற்றும் சேவைகளை பரிமாறிக் கொள்வதன் மூலமே லாபம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையை இஸ்லாமிய வங்கிகள் பின்பற்றுகின்றன.
இஸ்லாமிக் வங்கிகள் எப்படி செயல்படுகின்றன?
இஸ்லாமிக் வங்கிகள், வட்டிக்கு பதிலாக பல்வேறு வகையான ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுகின்றன. இதில் சில முக்கியமான ஒப்பந்தங்கள்:
முராபாஹா (Murabaha): ஒரு பொருளை வங்கி வாங்கி, அதில் லாபத்தைச் சேர்த்து வாடிக்கையாளருக்கு விற்கும் முறை.
முஷாரகா (Musharakah): வங்கியும் வாடிக்கையாளரும் இணைந்து ஒரு தொழிலில் முதலீடு செய்து, லாபத்தைப் பகிர்ந்து கொள்ளும் முறை.
முதாராபா (Mudarabah): வங்கி முதலீடு செய்து, வாடிக்கையாளர் தொழிலை நடத்தி, லாபத்தைப் பகிர்ந்து கொள்ளும் முறை.
இலாபம் எப்படி ஈட்டப்படுகிறது?
பங்குதாரர் உறவு: இஸ்லாமிக் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை பங்குதாரர்களாகக் கருதுகின்றன. ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும் போது, வங்கியும் வாடிக்கையாளரும் லாப நஷ்டங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
முதலீடு மற்றும் லாப பகிர்வு: வங்கிகள், வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்து, பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. இந்த திட்டங்களில் இருந்து கிடைக்கும் லாபம், வங்கியும் வாடிக்கையாளரும் ஒப்புக் கொண்ட விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
வணிக நடவடிக்கைகள்: இஸ்லாமிக் வங்கிகள் பொருட்களை வாங்கி, அவற்றை வாடிக்கையாளர்களுக்கு மறுவிற்பனை செய்வதன் மூலம் லாபம் ஈட்டுகின்றன. இந்த வணிக நடவடிக்கைகளில், வங்கி ஒரு குறிப்பிட்ட இலாபத்தை சேர்த்து விலையை நிர்ணயிக்கிறது.
குத்தகை முறை: வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு சொத்துக்களை வாங்கி குத்தகைக்கு விடுகின்றன. குத்தகை வாடகையிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி வங்கிக்கு கிடைக்கும்.
வீடு வாங்குவது எப்படி?
உதாரணமாக, நீங்கள் இஸ்லாமிக் வங்கியில் இருந்து வீடு வாங்க விரும்பினால், வங்கி முதலில் அந்த வீட்டை தன் பெயரில் வாங்கிக்கொள்ளும். பின்னர், நீங்கள் அதை வாடகைக்கு விடுவது போல, தவணைகளாக வங்கிக்கு பணம் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வீட்டின் முழு உரிமை உங்களுக்கு மாறிவிடும்.
தொழில் முனைவோர் கடன்: ஒரு தொழில் முனைவோர், தனது தொழிலை விரிவுபடுத்த வங்கியில் கடன் கேட்கிறார் எனில், வங்கி,தொழில் முனைவோருடன் இணைந்து ஒரு நிறுவனத்தை தொடங்கி, லாபத்தை பகிர்ந்து கொள்கிறது.


Click it and Unblock the Notifications