ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்து 5.5% ஆக நிர்ணயித்துள்ளது. இந்த முடிவு வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், வைப்பு நிதியில் அதிகப்படியான பணத்தை முதலீடு செய்து, அதன் மூலம் வருமானம் பார்க்கும் பல கோடி பேருக்கு இது பின்னடைவாக அமைகிறது. 2025 தொடக்கத்தில் இருந்து ரெப்போ விகித குறைப்பு தொடங்கியது, இதன் மூலம் வங்கிகள் FD-க்களின் வட்டி விகிதங்களை தொடர்ந்து குறைத்து வருகின்றன.
2025 பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரிசர்வ் வங்கி தலா 25 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதத்தை குறைத்தது. இந்த இரண்டு வட்டி விகித குறைப்புகள் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியதை அடுத்து இன்று 3வது முறையாக 50 அடிப்படைப் புள்ளிகள் ரெப்போ விகிதத்தில் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அடுத்த சில நாட்களில் வங்கிகள் FD வட்டி விகிதங்களை அதிரடியாக குறைக்கப்போகிறது.

SBI ரிசர்ச் அறிக்கையின்படி, 2025 பிப்ரவரி முதல் FD வட்டி விகிதங்கள் 30 முதல் 70 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளன. இது வைப்பு நிதி முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை கணிசமாக பாதிக்கிறது. இதனால், நிலையான வைப்பு மூலம் நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் இதன் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 3வது முறையாக ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.
FD வட்டி விகித குறைப்புடன், வங்கிகள் பிற சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களையும் குறைத்து வருகின்றன. SBI அறிக்கையின்படி, வங்கிகள் சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்களை 2.70% என்ற குறைந்தபட்ச அளவுக்கு குறைத்துவிட்டன. இது சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை மேலும் குறைக்கிறது, இதனால் மக்களின் சேமிப்பு திறன் பாதிக்கப்படலாம்.
ரெப்போ விகித குறைப்பு வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு பலன் அளிக்கும், வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவற்றின் மாதாந்திர தவணைகளை (EMI) குறைக்கும். ஆனால், FD மற்றும் சேமிப்பு கணக்கு முதலீட்டாளர்களுக்கு இது குறைவான வருமானத்தை ஏற்படுத்துகிறது. முதலீட்டாளர்கள் தங்கள் நிதி திட்டங்களை மறு ஆய்வு செய்து, மாற்று முதலீட்டு வழிகளை ஆராய வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications