அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப பதவியேற்கும் நிகழ்வு உலகமே உற்று நோக்கும் ஒரு நிகழ்வு. அதிலும் அதிரடிக்கு பெயர் போனவர் டிரம்ப் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியை பல்வேறு சாதனைகளையும் பல்வேறு பாரம்பரிய நடைமுறைகளையும் முறியடித்துள்ளது.
அதிபர் பதவியேற்கும் மிக வயதான நபர்: அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இருக்கிறார். அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் மிக வயதான நபர் என்ற பெயர் அவருக்கு கிடைத்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டு ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற போது அவருடைய வயது 78 ஆண்டுகள் 61 நாட்களாக இருந்தது. தற்போது டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் போது அவருடைய வயது 78 ஆண்டுகள் 220 நாட்களாக இருக்கிறது.

4 ஆண்டுகள் இடைவெளி விட்டு அதிபர் பதவி: டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்றாலும் அடுத்தடுத்த தேர்தல்களில் அவர் வெற்றி பெறவில்லை. அந்த வகையில் முன்னாள் அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லேண்டுக்கு அடுத்ததாக நான்கு ஆண்டுகள் இடைவெளி விட்டு அமெரிக்க அதிபர் பதவி வகிக்கும் நபர் டிரம்ப்.குரோவர் கிளீவ்லேண்ட் அமெரிக்காவின் 22 ஆவது அதிபராகவும் 24ஆவது அதிபராகவும் இருந்தார். டிரம்ப் 45ஆவது அதிபராகவும் 47ஆவது அதிபராகவும் பொறுப்பேற்கிறார்.
உள்ளரங்கில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சி: கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் முதன்முறையாக அதிபர் பதவி ஏற்பு விழா உள்ளரங்கில் நடைபெறுகிறது. அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிக்காலம் என்பதால் டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் நிகழ்ச்சி ரோட்டுண்டா உள்ளரங்கத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன்பு 1985 ஆம் ஆண்டு ரொனால்ட் ரீகன் அதிபராக பதவியேற்ற நிகழ்வு உள்ளரங்கில் நடைபெற்றது.
பதவியேற்புக்கு முந்தைய பேரணி: அமெரிக்க அதிபராக பதவி ஏற்பதற்கு முன்னர் தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி பேரணி நடத்திய முதல் அதிபர் என்ற பெருமை டிரம்புக்கு கிடைத்திருக்கிறது . பொதுவாக அமெரிக்கா அதிபராக பதவி ஏற்கும் நபர்கள் பதவியேற்ற பிறகு பேசக்கூடிய உரை மிக முக்கியமானதாக கருதப்படும். எனவே அது வரை அவர்கள் மௌனம் காப்பார்கள். ஆனால் அந்த பாரம்பரியத்தை உடைத்து பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாகவே டிரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் பிரம்மாண்ட பேரணி நடத்தி இருக்கிறார்.
வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு: டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக வெளிநாட்டு தலைவர்களை அழைத்து இருக்கிறார். பொதுவாக பாதுகாப்பு காரணங்கள் கருதி அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள். ஆனால் அந்த பாரம்பரியத்தை உடைத்திருக்கும் டிரம்ப் சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை அழைத்து இருக்கிறார்.
அதேபோல இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் சீனா சார்பாக துணை அதிபர் கலந்து கொண்டிருக்கிறார். அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதன்முறையாக சீனாவில் உயர் பதவியில் இருக்கும் நபர் கலந்து கொள்வது இதுவே முதன் முறையாகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications