ஐடி துறை வல்லுனராக இருந்து 400 கோடி வருமானம் ஈட்டக்கூடிய ஆர்கானிக் நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் சசிகுமார். கடந்த 2010 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த சசிகுமார் தன்னுடைய வாழ்க்கையின் ஒரு முக்கியமான முடிவினை எடுத்தார்.
கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் விப்ரோ உள்ளிட்ட முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்து மிகப்பெரிய வளர்ச்சியை எட்டிய சசிகுமார் அந்தத் துறையை விட்டு வெளியேறி விவசாயத்தில் கால் பதிக்க வேண்டும் என முடிவு செய்தார். அப்படித்தான் அக்சயகல்பா ஆர்கானிக் என்ற நிறுவனம் உருவானது. இந்தியாவிலேயே முதன்முறையாக சான்றிதழ் பெற்ற ஆர்கானிக் பால் பொருட்கள் நிறுவனம் இது.

கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும், அவர்களுக்கு சரியான வருமானம் கிடைப்பதோடு மட்டுமில்லாமல் மக்களுக்கு கலப்படமில்லாத இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் இவருடைய திட்டமாக இருந்தது.
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் சையின்ஸ் படித்து அமெரிக்காவின் இல்லினாய்ஸ் கல்வி நிறுவனத்தில் பொறியியலில் மேற்படிப்பை முடித்திருந்தாலும் சசிகுமாரின் குடும்பம் அடிப்படையில் விவசாயம் சார்ந்தது தான்.
இவரின் தந்தை ஒரு விவசாயி ஆவார். ஆனால் அவரால் முன்பை போல விவசாயத்தை தொடர முடியவில்லை. அப்போது தான் சசிகுமாருக்கு தன்னுடைய தந்தை போன்ற பல்வேறு விவசாயிகள் என்னென்ன சவால்களை சந்திக்கின்றனர் அவர்களால் ஏன் முன்பை போல விவசாயத்தை தொடர முடியவில்லை என ஆய்வு நடத்தினார். அப்படி தொடங்கப்பட்ட நிறுவனம் தான் அக்சய கல்பா ஆர்கானிக்.
இந்தியாவில் மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒரு அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மேம்படுத்த வேண்டும் என தொடங்கப்பட்டது தான் இந்த நிறுவனம். விவசாயிகளுக்கு தேவையான நிதி உதவிகளை பெற்று தருவது மற்றும் அவர்களுடைய பொருட்களை சந்தைப்படுத்துவது எவ்வாறு இயற்கையான இயற்கையான உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி விவசாயம் செய்வது என்பன உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறது இந்த நிறுவனம்.
மாட்டுச் சாணத்திலிருந்து மீத்தேன் எரிவாயுவை தயாரித்து மாட்டு பண்ணைகளுக்கு தேவையான செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறது, அதேபோல கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் நடைமுறைகளையும் கொண்டு வந்திருக்கிறது.
இதன் மூலம் நிலங்களில் மண்ணின் இயற்கையான கார்பன் அளவு கடந்த 10 ஆண்டு காலத்தில் 0.3 சதவீதத்திலிருந்து 0.98 சதவீதம் என அதிகரித்து இருக்கிறதாம்.
அக்சய்கல்பாவின் கீழ் இணைந்து விவசாயிகள் பலரும் மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்கள், அக்சய்கல்பா இவர்களிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து இணையதளம் வாயிலாக மக்களுக்கு விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தில் ஜெரோதா நிறுவனத்தின் உரிமையாளர்கள் நிதின் மற்றும் நிகில் காமத் இருவரும் கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளனர்.
விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சி வழங்கப்படுகிறது. மாடுகளுக்கு எவ்வாறு பசுந்தீவனங்களை வழங்க வேண்டும், ஆரோக்கியமான முறையில் எப்படி அவற்றை பராமரிக்க வேண்டும் என்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
தற்போது சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களிலும் அக்சய்கல்பா நிறுவனம் பால் ,நெய், சீஸ், வெண்ணெய், பன்னீர், தயிர், தேன், இளநீர், தேங்காய் எண்ணெய், காய்கறிகள், வாழைப்பழம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications