இன்றளவும் இந்திய மக்கள் தங்கத்தை விரும்பி வாங்குவதற்கு காரணமாக இருப்பது அதன் லிக்விடிட்டி. அதாவது தங்கத்தை எப்போதும் வேண்டுமானாலும் பணமாக மாற்றலாம். திடீரென மருத்துவ செலவுகள் ஏற்பட்டால் என்ன செய்வதென்றே தெரியாது. உடனே பீரோவில் இருக்கும் தங்கத்தை எடுத்து மக்கள் அடகு வைப்பார்கள். இதே நிலைமை தான் 35 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிற்கும் ஏற்பட்டது. அப்போது தங்க இருப்பில் ஒரு பகுதியை இந்தியாவும் அடகு வைத்தது.
1991-ஆம் ஆண்டு என்ன நடந்தது?: இந்திய வரலாற்றிலேயே 1991-ஆம் ஆண்டை யாராலும் மறக்க முடியாது. அந்த சமயத்தில் இந்தியாவுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அந்நியச் செலவாணி கையிருப்பு கடுமையாக சரிந்தது. இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டதால் வெளிநாடுகளில் இருந்து எந்தப் பொருளையும் இந்தியாவிற்கு கொண்டு வர முடியவில்லை. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கே இந்தியா திணறியது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 1990-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.5,050 கோடியாக இருந்தது. அதன் பிறகு 1991-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.4388 கோடியாகக் குறைந்தது. இது கூட பரவாயில்லை பின்னர் 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.2,386 கோடியாக சரிந்து அதள பாதாளத்திற்குச் சென்றது. இந்த தொகையை வைத்து அதிலிருந்து அடுத்து வரும் 2 வாரங்களுக்கான பொருட்களை மட்டுமே இந்தியாவால் இறக்குமதி செய்ய முடிந்தது.

ஏன் இந்த நிலைமை? 1990 முதல் 1991-ஆம் ஆண்டு வரை வளைகுடா போர் நடந்து கொண்டிருந்தது. இந்தப் போரின் காரணமாகத்தான் இவ்வளவு பிரச்சினைகள். போர் பதற்றத்தினால் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தது. வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டு வளைகுடா நாடுகளில் இருந்து வந்த அந்நிய செலாவணி வரத்து கடுமையாக குறைந்தது.
இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும்போது இந்திய ரூபாயின் மதிப்பு குறையத் தொடங்கும். 1991-ஆம் ஆண்டும் அதே நிலையை இந்திய சந்தித்தது. அப்போது டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு வேகமாக சரிந்து வந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை பயங்கரமாக உயர்ந்து மக்களை வாட்டி வதைத்தது.
இந்தப் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்காக, ரிசர்வ் வங்கி சில முக்கிய முடிவுகளை எடுத்தது. 1991-ஆம் ஆண்டின் மார்ச் முதல் ஜூலை வரையிலான மாதங்களில் இறக்குமதியை கட்டுப்படுத்தவும், அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இதனால் இந்திய அரசு வேறு வழியே இன்றி தங்க கையிருப்பின் பக்கம் திரும்பியது. ஆனாலும் முதற்கட்டமாக தங்க இருப்பின் மீது கை வைக்கவில்லை. பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 20 டன் தங்கத்தை மட்டுமே விற்று அவசர தேவையை சமாளித்தது. ஆனால் அந்த தொகையும் இந்திய நாட்டிற்கு போதவில்லை. நிலைமை மோசமானது. இதனால் 1991-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் இந்திய அரசு 46.91 டன் தங்கத்தை பேங்க் ஆஃப் ஜப்பான் மற்றும் பேங்க் ஆஃப் இங்கிலாந்திடம் அடகு வைத்து 405 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகப் பெற்றது.
இதில் சுவாரசியம் என்னவென்றால் அதே 1991-ஆம் ஆண்டின் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் இந்தியா மீண்டும் அடகு வைத்த நகையை திரும்பப் பெற்றது. அதிலிருந்து இன்று வரையில் இந்தியா தங்க இருப்பை யாரிடமும் அடகு வைக்கவே இல்லை.
இப்போது நிலைமை எப்படி இருக்கிறது?: 1991-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா இன்று தங்க கையிருப்பின் அடிப்படையில் உலகிலேயே 5-வது பெரிய நாடாக மாறியுள்ளது.
அன்று அவசரத்திற்கு அடகு வைத்த அதே இந்தியா இன்று உலகிலேயே தங்க இருப்பை வைத்துள்ள நாடுகளில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. 8,133.46 டன் தங்க கையிருப்போடு அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. அதை தொடர்ந்து இத்தாலி, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக இந்தியா 2026-ஆம் ஆண்டின் மார்ச் 31 நிலவரப்படி 880.52 டன் தங்கத்தை வைத்திருக்கிறது.
மத்திய வங்கிகளும் தொடர்ந்து தங்கத்தை அதிக அளவில் வாங்கி வருகின்றன. 2023-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு வரையில் உலக அளவில் இருக்கும் மத்திய வங்கிகள் 2800 டன்னுக்கும் அதிகமான தங்கத்தை வாங்கியுள்ளன.
கஷ்டம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் அவ்வப்போது ஏற்படும் என்பதற்கு 1991-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியே சாட்சி. ஆக உலக நாடுகளுக்கும் தங்கம் தான் கைகொடுக்கிறது.


Click it and Unblock the Notifications