அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27% வரியை விதித்திருக்கிறார். டிரம்பின் போட்டி வரி விதிப்பு நடவடிக்கையில் உலகின் பல்வேறு நாடுகளும் சிக்கி இருக்கின்றன.
ஏப்ரல் 2ஆம் தேதி தங்கள் நாட்டின் இறக்குமதி வரிகளில் பல்வேறு மாற்றங்களை டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதன்படி வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க மண்ணில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் குறைந்தபட்சம் 10 சதவீதத்திலிருந்து இறக்குமதி வரி விதிக்கப்படும் என தெரிவித்தார். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு அளவில் வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவை பொருத்தவரை 27% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இது இந்திய பொருளாதாரத்திற்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 18 சதவீத பொருட்கள் அமெரிக்காவிற்கு தான் செல்கின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்னணு சாதனங்கள்ம் துணிமணிகள் மற்றும் நகைகள், நவரத்தினங்கள் உள்ளிட்டவை பெரும்பாலும் அமெரிக்காவிற்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் தற்போது இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.
எனவே அமெரிக்க சந்தையில் இந்த பொருட்களின் விலை உயரக்கூடும். இந்த சூழலில் அமெரிக்க நிறுவனங்கள் அதிக விலையை கொடுத்து இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருட்களை வாங்கி விற்பனை செய்ய வேண்டும், இல்லை என்றால் இறக்குமதி செய்த அந்த விலை சுமையை வாடிக்கையாளர் மீது சுமத்த வேண்டும். இதனால் இந்தியாவில் இந்த துறைகள் பாதிக்கப்பட இருக்கின்றன.
ஆனால் இந்தியா இதனை ஒரு வாய்ப்பாக கூட எடுத்துக் கொள்ள முடியும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் சீனாவை சார்ந்திருக்கும் போக்கை மாற்றிக் கொள்ள மாற்றிக்கொள்ள முன் வந்துள்ளன. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது 36 சதவீத வரியும் சில பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
எனவே அமெரிக்க நிறுவனங்கள் சீன பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூடுதலாக செலவிட வேண்டும். எனவே அவர்கள் சீனாவுக்கு பதிலாக வேறு நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன் வருவார்கள். அந்த வகையில் இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கனவே பல்வேறு பொருட்களுக்கான உற்பத்தி மையமாக மாறி வருகிறது. மின்னணு சாதனங்கள் மற்றும் மருந்து துறைகளில் சீனாவில் இயங்கி வந்து பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை இந்தியாவிற்கு மாற்றி வருகின்றன.
எனவே இதனை இந்திய நிறுவனங்கள் வாய்ப்பாக எடுத்துக் கொண்டு அமெரிக்க சந்தையை குறி வைக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் சீனாவில் இருந்து வெளியேறக்கூடிய நிறுவனங்கள் தங்களின் விருப்பமான முதலீடு இடமாக இந்தியாவை தேர்வு செய்யக்கூடிய வகையில் அரசும் சில கொள்கை மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டம் மற்றும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகிறது.
மேலும் இந்தியா தன்னுடைய ஏற்றுமதியில் குறிப்பிட்ட சில நாடுகளை மட்டுமே சார்ந்திருக்காமல் அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்டவற்றோடு வர்த்தக ரீதியிலான உறவை வலுப்படுத்தினால் அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பித்து அதாவது அமெரிக்காவுக்கு மாற்றாக வேறு நாடுகளுக்கு தங்களுடைய பொருட்களை இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications