லண்டன்: இந்தியா சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தாலும் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பந்தம் தொடர்ந்து நீடிக்கிறது. குறிப்பாக இந்திய நிறுவனங்கள் பிரிட்டனில் தொழில் புரிவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது.
பிரிட்டனை பொருத்தவரை இந்தியாவுக்கு சொந்தமான 971 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் அங்கே 1,18,430 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அது மட்டும் இன்றி இந்த நிறுவனங்கள் மொத்தமாக பிரிட்டனில் 87 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டுகின்றன.

பிரிட்டனில் நேரடியாக முதலீடு செய்யக்கூடிய அந்நிய நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2023ஆம் ஆண்டில் மட்டும் இந்திய நிறுவனங்கள் பிரிட்டனில் 8,384 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. அதுமட்டுமின்றி இந்தியாவை சேர்ந்த பெரும் பணக்காரர்கள் பலரும் குடும்பத்துடன் பிரிட்டனில் தான் செட்டிலாகியுள்ளனர்.
2023ஆம் ஆண்டில் பிரிட்டனில் இந்தியாவுக்கு சொந்தமான 954 நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. அவை 1,05, 931 மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்ததோடு 64 மில்லியன் டாலர் வருமானத்தையும் ஈட்டி தந்தது. கார்ப்பரேட் வரியாக 2023 ஆம் ஆண்டில் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்திய நிறுவனங்கள் பிரிட்டன் அரசுக்கு செலுத்தியுள்ளன. நடப்பாண்டில் அது 1.50 பில்லியன் டாலர்கள் என உயர்ந்துள்ளதாம்.
இந்தியாவுக்கு சொந்தமான பிரிட்டனில் செயல்படக்கூடிய புகழ்பெற்ற நிறுவனங்களில் தாஜ் ஹோட்டல் குழுமத்திற்கு சொந்தமான St James Court Hotel பிரிட்டனில் புகழ்பெற்றவை. சிப்ளா, டாக்டர் ரெட்டீஸ், கிளென்மார்க் ஆகிய இந்திய மருந்து நிறுவனங்களும் பிரிட்டனில் ஆதிக்கம் செலுத்தும் மருந்து நிறுவனங்கள் ஆகும். அனில் அகர்வாலுக்கு சொந்தமான வேதாந்தா நிறுவனமும் லண்டனை தலைமை இடமாக கொண்டு வேதாந்தா ரிசோர்சஸ் என்ற நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறது. லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் இது இருக்கிறது.
2023இல் பிரிட்டனில் இந்திய நிறுவனங்கள் 118 முதலீட்டு திட்டங்களை மேற்கொண்டன. இதன் மூலம் 8384 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. டாடா குழுமம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் பிரிட்டனில் முதன்மையாக செயல்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிட்டன் நிறுவனங்களையும் இவை கையகப்படுத்தியுள்ளன. டாடா நிறுவனம், ஜாக்குவார் லேண்ட் ரோவர், டாடா ஸ்டீல், ஆகியவற்றை பிரிட்டனில் செயல்படுத்தி வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பிரிட்டனை சேர்ந்த பேட்டரி தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் குழந்தைகளுக்கான பொம்மை விற்பனை நிறுவனமான ஹாம்லேஸ் ஆகியவற்றை கையகப்படுத்தியுள்ளது. விப்ரோ நிறுவனம் பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட கேப்கோ நிறுவனத்தை 2022ல் வாங்கியது.
1994 ஆம் ஆண்டு ஈச்சர் மோட்டார் நிறுவனம் பிரிட்டனுக்கு சொந்தமான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை வாங்கியது. மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம், டிவிஎஸ் மோட்டார், யூகே பின்டெக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அங்கே செயல்பட்டு வருகின்றன. லட்சுமி மிட்டல், அடல் பூனவல்லா ஆகியோர் பிரிட்டனில் தங்களுக்கு சொந்தமாக குடியிருப்புகளை வாங்கி செட்டிலாகியுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications