குஜராத்: மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம் 10 ஆண்டுகளில் பல மடங்கு லாபத்தை ஈட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற போது மேக் இன் இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தை பயன்படுத்தி ஜப்பானை சேர்ந்த டோடோ என்ற நிறுவனம் 400 சதவீத லாபத்தை எட்டியுள்ளதாம். டோடோ நிறுவனம் குஜராத்தின் ஹலோ பகுதியில் ஆலையை நிறுவியுள்ளது. இதில் கழிவறைக்கு தேவையான நவீன வாஷ்பேஷன்கள், டாய்லெட் சீட்டுகள், ஷவர் அமைப்புகள் , குழாய்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கிறது.

இந்தியாவில் 10 ஆண்டுகளாக உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிற்குள் தொழிலை தொடங்கிய இந்த நிறுவனம் தற்போது பல மடங்கு லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது.
இந்தியாவில் தயாரித்து பொருட்களை உலக அளவில் ஏற்றுமதி செய்கிறது. ஈடி நவ் தளத்திற்கு இது தொடர்பாக பேட்டியளித்துள்ள டோடோ நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கஸாயுகி இந்தியாவிற்கான பொருட்களை தயாரித்து வழங்க வேண்டும் என்ற திட்டத்துடன் தான் நாங்கள் இங்கே தொழிலை தொடங்கினோம், தற்போது உலகிற்கு தேவையான பாத்ரூம் பொருட்கள் அனைத்தையும் நாங்கள் இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறோம் என கூறியுள்ளார்.
சர்வதேச தரத்தில் தங்களுடைய பொருட்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை அறிவித்த அடுத்த சில மாதங்களிலேயே ஜப்பானை சேர்ந்த டோடோ நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய ஆலையை நிறுவியது. இந்த திட்டத்தின் கீழ் கிடைத்த நிதி உதவிகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட இந்த நிறுவனம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் தங்களுடைய உற்பத்தி ஆலையை நிறுவி ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளது.
தங்கள் நிறுவனத்தின் விற்பனை 2014ஆம் ஆண்டு ஒப்பிடும்போது ஆறு மடங்கு அதிகரித்துள்ளது என இந்த நிறுவன இயக்குனர் கூறுகிறார். குஜராத் மாநிலம் துறைமுகங்களை கொண்டு இருப்பதால் தங்களது உற்பத்தி ஆலையை அங்கே நிறுவினோம் எனவும், தங்களுடைய பொருட்களை தயாரிப்பதற்கு தேவையான மண் குஜராத்தில் அதிக அளவில் கிடைப்பதால் அதுவே பொருத்தமான இடம் என தேர்வு செய்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓர் ஆண்டுக்கு கழிவறைக்கு தேவையான ஐந்து லட்சம் பொருட்களை தங்களுடைய ஆலையில் தயாரிப்பதாக டோடோ இந்தியா நிறுவனத்தின் தலைவர் கூறுகிறார். தங்கள் ஆலையில் வேலை செய்பவர்களில் 80 சதவீத ஊழியர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.


Click it and Unblock the Notifications