இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகிய இரண்டும் பல்வேறு அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கு உதவுகிறது. வங்கி பரிவர்த்தனைகள் முதல் போஸ்ட் ஆபீஸ்களில் முதலீடு செய்வது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இரண்டும் தான் முதன்மை ஆவணங்கள். இந்நிலையில் பலருக்கும் ஒரு கேள்வி எழலாம். ஒருவர் இறந்த பிறகு அவர்களுடைய ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு எவ்வளவு நாள் செயலில் இருக்கும்? அவற்றை செயலிழக்கச் செய்வதற்கான அதிகாரப்பூர்வ விதிகள் என்ன? என்ற குழப்பங்கள் இருக்கலாம். இந்த பதிவில் அதற்கான விடையைத் தெரிந்து கொள்வோம்.
கேஒய்சி சரிபார்ப்புக்கு தேவைப்படும் முக்கிய ஆவணங்களில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இன்றியமையாதவை. இருப்பினும் ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகு அவை தவறாக பயன்படுத்தப்படலாம். இதனால் இறந்தவரின் குடும்பத்திற்கு பல சிக்கல்கள் எழலாம்.

சிலர் இறந்த பிறகு எத்தனை நாள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆக்டிவாக இருக்கும் என்ற குழம்ப கூடும். இதை நீங்களாக ப்ளாக் அல்லது டி-ஆக்டிவேட் செய்யாத பட்சத்தில் ஆதார் மற்றும் பான் கார்டு தொடர்ந்து ஆக்டிவாக தான் இருக்கும். இந்த இரண்டு கார்டுக்கும் எக்ஸ்பயரி கிடையாது.
இன்றைய நவீன காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பலரின் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை வைத்து மோசடிகள் நடக்கிறது. இந்நிலையில் இறந்தவருடைய ஆதார் கார்டும் அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் அது குறித்த விவரங்கள் குடும்பத்திற்கு தெரியாமலேயே போகும் அபாயங்கள் உள்ளது. எனவே இறந்தவருடைய ஆதார் கார்டை பயோமெட்ரிக் லாக் செய்து வைக்கலாம் இதனை ஆன்லைனிலேயே எளிதாக செய்ய முடியும். ஆதார் கார்டு லாக் செய்து வைப்பதன் மூலம் அங்கீகரிக்கப்படாத நோக்கங்களுக்காக யாரும் ஆதார் கார்டை பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்தலாம்.
ஆதார் கார்டு எல்பிஜி மானியம், EPF கணக்குகள் என பலவற்றுக்கும் பயன்படுகிறது. இந்நிலையில் பலர் ஒருவர் இறந்து இறப்பு சான்றிதழ் பெற்றுவிட்டால் உடனே ஆதார் கார்டு தானாகவே செயல் இழந்து விடும் என்றும் கருதுகின்றனர். ஆனால் அப்படி கிடையாது. இன்னும் சிலருக்கு ஆதார் கார்டில் இறப்பு தேதியை வைத்து புதுப்பிக்கலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. ஆதார் கார்டில் இறப்புத் தேதியை வைத்து புதுப்பிக்கவே முடியாது. மற்ற அனைத்து தகவல்களையும் நாம் புதுப்பித்துக் கொள்ளலாம். அதற்காகத்தான் பயோமெட்ரிக் லாக் செய்து வைப்பது முக்கியம்.
ஆதார் கார்டை இறப்புச் சான்றிதழ் உடன் இணைத்து வைக்கலாம். எதிர்கால பரிவர்த்தனைகளில் சிக்கல்களை தவிர்க்க இது உதவுகிறது.
பான் கார்டு: ஆதாரைப் போலவே இறந்தவரின் பான் கார்டுயும் பிளாக் செய்ய வேண்டும் பான் கார்டை மூட குடும்ப உறுப்பினர்கள் ஆன்லைன் சேவை மையத்தை பார்வையிடலாம். ஆனால் இறந்தவர் வருமானவரி செலுத்துபவராக இருந்தால் வருமான வரி ரீஃபண்ட் பெறுவதற்கு அல்லது வேறு ஏதேனும் முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் அவருடைய குடும்பத்தில் இருக்கும் நாமினி தொகையை பெறுவதற்கு என பல்வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
எனவே இது போன்ற அனைத்து செயல்முறையையும் முடித்துவிட்டு இறந்தவருடைய பான் கார்டை ஒப்படைக்கலாம். இறந்தவர்களின் ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் எந்தவித அபராதமும் இல்லை. இருந்தாலும் இது போன்ற முக்கிய ஆவணங்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதன் மூலம் மோசடிகள் எதுவும் நடக்காமல் தடுக்கலாம்.


Click it and Unblock the Notifications